Published : 30 Dec 2020 03:57 PM
Last Updated : 30 Dec 2020 03:57 PM

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலாளர்களுக்கென தனி நலவாரியத்தை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (டிச.30) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வர் பழனிசாமி 11.11.2020 அன்று விருதுநகரில் கீழ்க்கண்ட அறிவிப்பினை அறிவித்தார்.

'தமிழக அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தற்போது, உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தின்கீழ், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலாளர்கள் தங்களது நல உதவிகளைப் பெற்று வருகின்றனர்.

இதில், சுமார் 4 லட்சம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில், அவர்களுக்கென தனியே ஒரு நலவாரியம் அமைக்க வேண்டுமென்று பால்வளத்துறை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்புத் தொழில் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 4 லட்சம் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலாளர்களுக்கென தனியே ஒரு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை அமைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'.

மேற்படி முதல்வரின் அறிவிப்புக்கிணங்க, தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரைத் தலைவராகவும், அரசுப் பிரதிநிதிகளாக செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆகியோரும் அலுவல்சாரா உறுப்பினர்களாக, வேலையளிப்போர் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை சார்பான பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை சார்பான பிரதிநிதி மற்றும் தொழிற் கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகியோரும், தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி மற்றும் பிற தொழிற்சங்க பிரதிநிதி ஆகியோர் அடங்கிய வாரியம் அமைப்பதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேற்கூறிய ஆணைக்கிணங்க அரசாணை எண்.214, தொ (ம) வே.வா துறை, நாள் 30.12.2020-ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள 62 ஆயிரத்து 661 பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்நலவாரியம் தொடங்கப்படும்.

இன்றைய தேதியில் 1,250 பட்டாசு தொழிற்சாலைகளும், 870 தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இதில், ஏறத்தாழ 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருவதாகத் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அமைக்கப்படவிருக்கும் புதிய நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயன்பெறலாம். இந்நலவாரியத்தின் தலைமையிடம் சென்னையில் செயல்படும்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x