

வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்குத்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என, வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
வேலூர் மார்க்கெட் பகுதியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (டிச.30) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"கரோனா ஊரடங்கு காலத்தில் வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், 2 மாத வாடகையைத் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். ஆனால், வேலூர் மாநகராட்சி நிர்வாகம் வாடகையை முழுமையாகச் செலுத்த வேண்டும் எனக் கூறுவதாகப் புகார் எழுந்துள்ளது. முதல்வர் அளித்த உத்தரவுக்கு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். வேலூர் மாநகராட்சி நிர்வாகம் 2 மாத வாடகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
வேலூர் மார்க்கெட் பகுதியில் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் உள்ளன. இதனால், வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கால்வாய் சீரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி முடிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காகப் பல இடங்களில் கடைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் வியாபாரிகளின் வாக்கு வங்கி பெரிய அளவில் உள்ளது. அனைத்து வியாபாரிகளையும் ஒருங்கிணைந்து வருகிறோம்.
ஆகவே, வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் அரசியல் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு கொடுப்போம். தேர்தல் தேதி அறிவித்த பிறகு, ஆட்சி மன்றக் குழுக்கூட்டத்தில், தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும்".
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.
இந்நிகழ்ச்சியில், வணிகர் சங்க நிர்வாகிகள் ஞானவேலு, ஆம்பூர் கிருஷ்ணன், அருண்பிரசாத், கோட்டீஸ்வரன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.