

அலங்காநல்லூர் உள்ளூர் காளியம்மன் கோயில் திருவிழா இன்றுடன் முடிந்தநிலையில் நாளை ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் தொடங்குகிறது.
கரோனா பாதிப்பால் போட்டி எந்த விதத்திலும் சுவாரசியம் குறையாமல் இருக்க வழக்கம்போல் கார், புல்லட் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகள் சிறந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், வீரருக்கும் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகை நாட்களில் நடக்கும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் புகழ்பெற்றவை.
இதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண உலகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள். இந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவதை விட காளைகளை இங்குள்ள வாடிவாசலில் அவிழ்ப்பதையே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பெருமையாக கருதுவார்கள். பரிசுகளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் வழகப்படும்.
சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கும், வீரருக்கும் கார்க, புல்லட், பைக், டிவி, பீரோ, ப்ரீட்ஜ், கட்டில், மெத்தை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்று வாடிவாசலில் காளைகளை அவிழ்த்தாலே 10-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்படும். அந்தளவுக்கு பரிசு மழையால் காளை வளர்ப்போரும், காளைகளை அடக்குவோரும் உற்சாகமடைவார்கள்.
அதனாலேயே, தமிழகம் முழுவதும் இருந்து இந்த போட்டியில் பங்கேற்க காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், கரோனா தொற்று பரவலால் கட்டுப்பாடுகளுடன் இந்த ஆண்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதனால், போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் எண்ணிக்கை முன்பை விட 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. அதனால், காளை வளர்ப்போர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், டோக்கன் பெறுவதற்காக தற்போதே காளை வளர்ப்போர் தங்கள் காளைகளை தயார் செய்து வருகின்றனர்.
போட்டி ஏற்பாட்டாளர்கள் கரோனா கட்டுப்பாடுகளால் போட்டி சுவாரசியமில்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக கடந்த ஆண்டைப்போலவே பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா க்குழு தலைவர் ஜே.சுந்தர்ராஜன் கூறியதாவது:
அரசு கட்டுப்பாடுகளுடன் போட்டிகளை நடத்தும் அதே வேளையில் முன்போல் சுவாரசியம் குறையாமல் நடத்தப்படும். வழக்கம்போல் சிறந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், வீரர்களுக்கும் கார், புல்லட் உள்ளிட்ட விலை உயர்ந்து பரிசுகள் வழங்கப்படுகிறது.
எங்கள் ஊர் காளியம்மன் கோயில் திருவிழா இன்று மாலையுடன்நிறைவடைகிறது. நாளை முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகளை தொடங்கிவிடுவோம். போட்டியில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் எண்ணிக்கை குறித்து விழாக்குழுவினர் ஆட்சியருடன் ஆலோசனை செய்யவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.