

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பணி செய்யவிடாமல் தடுத்து தரையில் அமர வைப்பதாக ஊராட்சி பெண் தலைவர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தார் அருகே உள்ள குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் முத்துலட்சுமி.
தன்னை பணி செய்ய விடாமல் ஊராட்சி துணைத்தலைவர் தடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்தார்.
இதுபற்றி ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி கூறுகையில், "நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் என்னை பணி செய்யவிடாமல் ஊராட்சி துணை தலைவர் வரதராஜன் தடுக்கிறார்.
எனக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இடம் இல்லை என்று கூறி தரையில் தான் அமர வேண்டும் என்றும் ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் வெளியில் தான் இருக்க வேண்டும் என்றும் மிகவும் இழிவுபடுத்தும் விதமாக நடத்துகிறார்.
மேலும் ஊராட்சியில் மேற்கொள்ளும் எந்தப் பணிகள் குறித்தும் எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஊராட்சியில் உள்ள 6 வார்டு உறுப்பினர்களும் துணைத் தலைவருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
எனவே ஊராட்சி தலைவர் என்ற முறையில் என்னை பணி செய்ய விடாமல் தடுக்கும் துணை தன் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.