

மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டங்கள் குறித்து, கோவை விவசாயிகளுக்குக் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்துக் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பக்சிராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கும், வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுக்களுக்கும் வெளியே வர்த்தகம் செய்ய கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்க விவசாயிகளுக்கு உதவ வேண்டும், வழிவகை செய்ய வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளன.
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பயனடைய மாட்டார்கள் என்று கருதுவது தவறு. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வாங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் விலையையும் தீர்மானிக்க முடியும்.
பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் உள்ளூர் துணை ஆட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர் அளவில் குறைந்த செலவில் , குறிப்பிட்ட கால வரையறைக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதே உண்மை.
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்காது என்று தகவல் பரப்பப்படுகிறது. விளைபொருட்களை வாங்குபவர்கள், ஒரே நாளிலோ அல்லது 3 நாட்களுக்குள்ளோ விவசாயிகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்று இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உழவர் அமைப்புகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்று அஞ்சுகின்றனர். அனைத்து உழவர் அமைப்புகளும் விவசாயிகள் என்றே கருதப்பட்டு, அவர்களுக்கான அனைத்து நன்மைகளையும் அடைய முடியும். குறைந்தபட்ச ஆதார விலை முறை இருக்காது என்று விவசாயிகள் கருதுகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை முறை முன்பு போலவே தொடரும்.
இந்திய உணவுக் கழகம் மற்றும் இதர அரசாங்க நிறுவனங்கள், முன்போலவே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வது தொடரும். எனவே விவசாயிகள் இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்வதை நிறுத்திவிடும் என்று அச்சப்பட வேண்டாம்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே விற்க விவசாயிகளுக்கு உரிமம் தேவை என்று கூறி வருகின்றனர். விவசாயிகள் பதிவு, பரிவர்த்தனைக் கட்டணம் இல்லாமலேயே அதிக விலையை வழங்குபவருக்கு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே விளைபொருட்களை விற்கலாம்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூடப்படாது. வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும். இச்சட்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யாது. மாறாக விற்பனைக் கூடங்களுக்கு வெளியே, கூடுதல் வர்த்தகத்தை அனுமதிக்கிறது.
விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க இச்சட்டம் போதுமான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. விவசாய நிலங்களைப் பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட்டுகள்) கையகப்படுத்த வழிவகுக்காது. மாறாகத் தடுக்கும். எனவே விவசாயிகள் புதிய வேளாண்மைச் சட்டங்கள் குறித்து அச்சப்படத் தேவையில்லை''.
இவ்வாறு இயக்குநர் பக்சிராம் கூறியுள்ளார்.