புத்தாண்டில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: மத்திய உளவுத் துறை எச்சரிக்கையால் பரபரப்பு

புத்தாண்டில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: மத்திய உளவுத் துறை எச்சரிக்கையால் பரபரப்பு

Published on

பதான்கோட் தாக்குதல்போல புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் போட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் 2016-ம்ஆண்டு ஜன.2-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எல்லை பாதுகாப்பில் இருக்கும் ராணுவம், விமானப்படை தளங்கள், கப்பல் படை தளங்கள், மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸார் என பாதுகாப்புபணியில் இருக்கும் ராணுவத்தினர் மற்றும் அனைத்து பிரிவு போலீஸார் மீது தாக்குதல் நடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளின் சதித்திட்டம் குறித்து மத்திய பாதுகாப்பு துறைக்கு உளவுத்துறை தகவல்தெரிவித்துள்ளது. ‘ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பாஆகிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பாகிஸ்தானில் இருந்து சில தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர். புத்தாண்டு தினத்தன்று தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது’ என உளவுத்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதல் திட்டத்துக்காக ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்துசெயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராணுவம், போலீஸ் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது.

மத்திய உளவுத் துறையின்எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ராணுவமையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ஓடிஏ, டிஆர்டிஓ வளாகங்கள், தாம்பரம் விமானப்படை தளம், இந்திய கப்பற்படைக்கு சொந்தமான அரக்கோணம் விமான தளம், தமிழக கடலோரத்தில் உள்ள இந்திய கப்பற்படை வளாகங்கள் மற்றும் கடலோர காவல் படை அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை விமானநிலையம் உட்பட மத்திய தொழிற்படையினரின் பாதுகாப்பில் இருக்கும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு முடியும்வரை இந்த பாதுகாப்பு தொடரஅதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in