

தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2017 டிச.31-ல்ரஜினிகாந்த் அறிவித்தார். அதன்பிறகு தொடர்ந்து சில மாதங்கள்மாவட்டம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பு, இணையவழியில் உறுப்பினர் சேர்க்கை, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என தீவிரம் காட்டினார்.
கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘அரசியலுக்கு வந்து தேர்தலில் வெற்றிபெற்றாலும் நான் முதல்வராக மாட்டேன். நல்லவர், நேர்மையானவர், அறிவாளியாக உள்ள ஒருவரை முதல்வராக அமர்த்தி ஒரு குழு ஆட்சியை வழிநடத்தும்’ என்று தெரிவித்தார்.
இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வாய்ப்பு தர உள்ளதாகத் தெரிவித்த ரஜினி, “அரசியலில் பணம் செலவழிப்பது இல்லாமல் மக்கள் அலை ஒன்று, எழுச்சி ஒன்று உருவாக வேண்டும், அதை ரசிகர்கள் உருவாக்கவேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ‘அரசியல் மாற்றம்..ஆட்சி மாற்றம்.. இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை’என்பன போன்ற அவரது முழக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதனிடையே, கரோனா பரவல் அச்சுறுத்தலால் அவரது அரசியல் செயல்பாடுகளில் தொய்வுஏற்பட்டது. அவர் தெரிவித்த ஆன்மிக அரசியல் எனும் கருத்து பெரும்விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நேரில்சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினி, அடுத்த சில நாட்களில், 2021-ம் ஆண்டு ஜனவரியில் கட்சிதொடங்கப்படும். அதுதொடர்பான அறிவிப்பு டிச.31-ம் தேதிவெளியிடப்படும் என்று அறிவித்தார். அப்போது, தான் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுப்பதற்காக ஹைதராபாத்துக்கு படப்பிடிப்புக்கு சென்றார். அங்கு அவருக்குதிடீர் ரத்த அழுத்த மாறுபாடுகாரணமாக 3 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்.
உடல் நிலை பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் திட்டமிட்டபடி டிச.31-ம் தேதி அரசியல் கட்சிஅறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில்தான் நேற்று ரஜினியிடமிருந்து, கட்சி தொடங்கப்போவதில்லை என்ற அறிவிப்பு வெளியானது.
2017 டிச.31-ல் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் 2020 டிச.31-ல்கட்சி தொடங்கும் நாளை வெளியிடுவேன் என்றும் கூறிய ரஜினியின் அரசியல் பிரவேசம் கட்சி தொடங்கப்படாமலேயே முடிவுக்கு வந்துவிட்டது.