இஸ்ரேல் தொழில்நுட்பம் மூலம் வெள்ளரி சாகுபடியில் விவசாயி சாதனை: தமிழகத்திலேயே அதிக விளைச்சல்

இஸ்ரேல் தொழில்நுட்பம் மூலம் வெள்ளரி சாகுபடியில் விவசாயி சாதனை: தமிழகத்திலேயே அதிக விளைச்சல்
Updated on
1 min read

இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் பாலிஹவுஸ் அமைத்து இரண்டு ஏக்கரில் சாகுபடி செய்யவேண்டிய வெள்ளரியை அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து தமிழகத்திலேயே அதிக விளைச்சல் கண்டுள்ளார் திண்டுக்கல்லை சேர்ந்த விவசாயி.

திண்டுக்கல் மாவட்டம், குளத்தூரை சேர்ந்த விவசாயி சுப்புராஜ் மகன் ரமேஷ். இவர் தோட்டக் கலைத் துறை மானியத்தில் பாலிஹவுஸ் அமைத்து அரை ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்துள்ளார். வெள்ளரி செடிகள் வழக்கமாக தரையில் படர்ந்து வளரும். இவை கொடிபோல் மேல் நோக்கி வளரவிடப்பட்டுள்ளது. இதற்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர். பாலிஹவுசில் தட்பவெப்பநிலை சீராக வைக்கப்படுவதன் மூலம் அதிக வெயில், மழை, காற்று பாதிப்பு இன்றி முழுமையாக சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து விவசாயி ரமேஷ் கூறியதாவது:

இரண்டு ஏக்கரில் சாகுபடி செய்யவேண்டிய வெள்ளரி செடியை மேல்நோக்கி வளரச் செய்வதன் மூலம் அரை ஏக்கரி லேயே சாகுபடி செய்துவிடலாம். இரண்டு ஏக்கரில் கிடைக்கும் விளைச்சல் நமக்கு கிடைத்துவிடும். அரை ஏக்கருக்கு 35 டன் வெள்ளரி விளைச்சல் கிடைக்கும். 140 நாள் பயிரான வெள்ளரியை பயிரிட்ட 35 நாட்கள் முதல் அறுவடை செய்யலாம். பாலிஹவுஸ் அமைக்க தோட்டக்கலைத் துறை மானியம் வழங்குகிறது. குறைந்த பரப்பில் அதிகளவு சாகுபடிக்கு இஸ்ரேல் தொழில்நுட்பம் ஏற்புடையதாக உள்ளது. கடந்த முறை ஒரு ஏக்கரில் பாலிஹவுஸ் அமைத்து வெள்ளரி பயிரிட்டு தமிழகத்திலேயே அதிகபட்சமாக 78 ஆயிரம் கிலோ விளைச்சல் எடுத்துள்ளேன். இந்த தொழில்நுட்பம் அனைத்து விவசா யிகளுக்கும் சென்றடைவதன் மூலம் விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகள் பயனடைய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in