நாங்கள் இனி போஸ்டர்கள் ஒட்டமாட்டோம்: எல்லோரையும் ரஜினி ஏமாற்றிவிட்டார்; மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஆதங்கம்

நாங்கள் இனி போஸ்டர்கள் ஒட்டமாட்டோம்: எல்லோரையும் ரஜினி ஏமாற்றிவிட்டார்; மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஆதங்கம்
Updated on
3 min read

ரஜினிகாந்த் அறிவிப்பு எல்லோரையும் ஏமாற்றிவிட்டதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

கூறியபடியே அம்பு விட்டுவிட்டார்

ரஜினி மக்கள் மன்ற கோவை தெற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் என்.சத்தியமூர்த்தி: கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தீவிர ரஜினி ரசிகராக இருந்து வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி ‘எல்லாமே முடிச்சுட்டேன், அம்பு விடுவது மட்டும் தான் பாக்கி’ என்றார். கூறியபடி தற்போது அம்பு விட்டுவிட்டார். அவருக்காக 3 வருடங்கள் நாங்கள் கடுமையாக உழைத்தோம். குடும்பத்தை கூட கவனிக்காமல் மக்கள் பணி மேற்கொண்டோம். மாற்றுக் கட்சிகளின் எதிர்ப்பை தாண்டி, ரஜினியின் இலக்கான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டோம். எங்களுக்கு வேறு எந்த ஆசையும் கிடையாது. நாங்கள் எந்தப் பதவியும் கேட்கவில்லை. எல்லாத்தையும் மாற்றுவோம் என்றார். கூறியபடி எல்லாத்தையும் மாற்றிவிட்டார்.

நாங்கள் இனி போஸ்டர்கள் ஒட்டமாட்டோம். ஷோ எடுக்க மாட்டோம். எல்லோரையும் ரஜினி ஏமாற்றிவிட்டார். தமிழகத்தில் இன்று கறுப்பு நாள். ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பதற்காக வேறுகட்சிக்கு செல்ல மாட்டோம்.

ரஜினி மக்கள் மன்ற தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன்: 1988-ம் ஆண்டு முதல் தலைவருடன் இருக்கிறேன். அவர்உடல்நலன்தான் முக்கியம். இதை அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் நான்வலியுறுத்தினேன். அவர் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன் என்று உறுதி அளித்தேன். தனது உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவைபுரிய விரும்பினார். அவர் உடல்நலுக்கு அப்பாற்பட்டதுதான் மற்றதெல்லாம் என்பதே எங்களது கருத்தாகும். ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் என்று தலைவர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது.

ரஜினி மக்கள் மன்ற மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.வி.கே.ராஜா: சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் தலைவரின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு நீங்கள் என்னமுடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுகிறோம் என்றுதான் சொன்னோம்.அதன்படி அவர் இந்த முடிவெடுத் திருப்பது வரவேற்கக்கூடியதுதான். நான் 20 ஆண்டுகளாக ரசிகராகவும், 3 ஆண்டுகளாக ரஜினி மக்கள் மன்ற மத்திய சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறேன். ரஜினி மக்கள் மன்றம் மூலம் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம். உடல் நலன் நன்றாக இருந்திருந்தால் அவர் சொல்லிய வார்த்தையைக் கண்டிப்பாக காப்பாற்றியிருப்பார்.

சென்னை அண்ணாநகர் மேற்குபகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகர் கே.சீனிவாசன்: நான் 8 வயதில் இருந்தே ரஜினி ரசிகராக இருக்கிறேன். தலைவர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன்.

உண்மையான ரஜினி ரசிகர்கள், அவர் முழு உடல் நலத்துடன் இருப்பதையே விரும்புவார்கள். அதையே நானும் விரும்புகிறேன். ரஜினி மக்கள்மன்றத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாம் உள்ளிட்ட முகாம்களுக்கு சென்று நானும் பணியாற்றி யுள்ளேன்.

மக்களுக்கும் ஏமாற்றமே

தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற 2 கட்சிகளுக்கு மாற்றாக வந்து பெரிய மாற்றத்தை உருவாக்குவார் என்று எதிர்பார்த்த மக்களுக்குத்தான் இது பெரிய ஏமாற்றமாக இருக்கும்.அவர் அரசியலுக்கு வர வேண்டும்என்பதைவிட, உடல் ஆரோக்கியத் துடன் இருக்க வேண்டு்ம் என்பதே என்னைப் போன்ற ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

ஜி.சரவணன், சேலம்: அரசியலில் ஈடுபடுவதற்கு வயது மற்றும் உடல்நிலை மிகவும் முக்கியம். அது இரண்டுமே ரஜினிக்கு இல்லை. அரசியல் என்பது செலவு செய்துவிட்டு, அதனை பல மடங்காக திரும்ப எடுப்பதுதான் என்றாகிவிட்டது. அந்த மாதிரியான கேரக்டர் ரஜினிக்கு இல்லை.

அவமானம்தான்

ஆனால், அரசியலுக்கு வரப்போகிறேன், கட்சியை தொடங்கப் போகிறேன் என்று கூறிவிட்டு, இப்போது வரவில்லை என்று கூறுவது, அவமானம்தான். ஏமாற்றமளிக்கிறது. இருந்தாலும், இப்போதுள்ள சூழலில்,அரசியலில் ஈடுபட்டு, அதில் தோல்வியை தழுவினால், மிகப்பெரிய அவமானம் ஏற்படும். அதற்கு, இப்போதே விலகியது ஒரு வகையில் நல்லது.

2012-ம் ஆண்டில், ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, ரசிகர்களின் வேண்டுதலால் தான் அவர் உயிர் பிழைத்தார். அப்படிப்பட்ட ரசிகர்களின் நலனுக்காக, பொருளாதார ரீதியாக, ரஜினி கட்டாயம் இப்போது உதவிகளை செய்ய வேண்டும். இதை தவிர்க்கக் கூடாது.

ரஜினி மக்கள் மன்ற மதுரைமாநகர் 1-ம் பகுதிச் செயலர் செந்தில் பாபா, மதுரை: எங்களது தலைவரின் உடல் நிலை முக்கியம். அவர் நன்றாக இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும். நேற்று முன்தினம் கூட, அவர் கட்சி அறிவிக்கலாம் என்ற நிலையில் இருந்திருக்கிறார். மருத்துவர்களின் ஆலோசனைகளை ஏற்று அவரது முடிவை மாற்றியிருக்கலாம்.

தமிழகத்தில் 2 திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில் அவரது உயிர் பலிகடாவாகி விடக்கூடாது. அவர் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் சந்தோஷம். அவர் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான்.

ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாநகர செயலாளர், மயூரா ஜி.சுதாகர்: தலைவரின் உடல் நிலை எங்களுக்கு முக்கியமானது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏதோ ஒருபாதிப்பு ஏற்படும் என்பதே தலைவரின்கருத்து. அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் எங்களுக்கு அவர் தலைவராக இருப்பார். கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் எங்களுக்கு மகானாக இருப்பார்.

‘ஏத்துன பேனர் எல்லாம் ஒருநாள் கீழே இறக்கித்தான் ஆகனும். ஒட்டுனபோஸ்டர் எல்லாம் ஒரு நாள் கிழிச்சித்தான் ஆகனும். நான் மேலே இருக்கிறேன். ஒருநாள் கீழே இறங்கித்தான் ஆகனும். இதுதான் விதி’ என்று அன்றே சொன்னார் ரஜினி. எனவேஎங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. என்றும் நாங்கள் தலைவருக்காக உழைக்க காத்திருக்கிறோம்.

ரஜினி மக்கள் மன்ற திருச்சி மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.கர்ணன்: டிச.31-ம் தேதி அரசியல் கட்சி குறித்து முறைப் படி அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்ததால், நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தோம்.

ஒருதலைக் காதலாகி விட்டது

ஆனால் ‘அண்ணாத்த’ பட சூட்டிங்கால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தலைவர் ரஜினிகாந்தின் இந்தமுடிவு எங்களுக்கு பெருத்த ஏமாற்றமே. எனினும் அவரது உடல்நலன் கருதி இதனை ஏற்றுக் கொள்கிறோம். எங்களைப் பொறுத்தவரை என்றைக்கும் அவர்தான் முதல்வர். பல காலங்களாக காதலித்தும், கடைசியில் ஒருதலைக் காதலைப் போலவே முடிந்துவிட்டது எங்கள் தலைவரின் அரசியல் ஆசை. மீளாத சோகத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

புதுச்சேரி மாநில ரஜினி மக்கள்மன்ற துணைச் செயலாளர் ரமேஷ்:தலைவர் ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். அவர் காட்டிய வழிதான் எல்லாமே. அவரது உடல்நிலைதான் முக்கியம். அதன்பிறகுதான் அரசியல். அவர் ஆரோக்கியத்துடன் இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in