

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையில் இருந்து, சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் ராட்சத குழாய்கள் புதைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இங்கு, நாள்தோறும் 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக தென் சென்னை பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு நாள்தோறும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் புதிய ஆலையை, ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் ரூ.6 ஆயிரத்து 78 கோடி செலவில்அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
ராட்சத குழாய்கள்
புதிய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய ஆலையில் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றி மேடவாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம் மற்றும் சிறுசேரியில் உள்ள சிப்காட் உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ராட்சத குழாய்கள் புதைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில், நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் பொக்லைன் மற்றும் கிரேன் இயந்திரங்களின் உதவியுடன் 10 அடி ஆழத்தில் பூமிக்கடியில் குழாய்கள் புதைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தண்ணீர் அதிவேகத்தில் செல்லும் போது கசிவுஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்தில் வெல்டிங் செய்யப்பட்டு இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக நெம்மேலி, பேரூர், புதுகல்பாக்கம், சூளேரிக்காடு, வடநெம்மேலி, திருவிடந்தை ஆகிய பகுதிகளில் குழாய் புதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.