திருத்தணி முருகன் கோயில் திருப்புகழ் திருப்படி திருவிழாவில் பஜனை, இசை நிகழ்ச்சிகள் ரத்து: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல்

திருத்தணி முருகன் கோயில் திருப்புகழ் திருப்படி திருவிழாவில் பஜனை, இசை நிகழ்ச்சிகள் ரத்து: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல்
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் டிச.31 காலை 6 மணி முதல் கோயில் நடை திறக்கப்பட்டு மறுநாளான ஜன.1-ம் தேதி இரவு 8.45 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளோடு 2020 - 2021 திருப்புகழ் திருப்படி திருவிழா வரும் டிச.31, ஜன.1 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. அதன்படி, இவ்விரு நாட்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு8 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

டிச.31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையான தரிசன நிகழ்ச்சியும், டிச.31, ஜன.1 ஆகிய இரு நாட்களில் கோயிலில் நடைபெறும் பஜனை மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், டிச.31-ம் தேதி காலை 8.30 மணிக்கு படி பூஜை தொடக்க விழா சிறிய அளவில் கோயில் நிர்வாகத்தால் பக்தர்கள் இன்றி நடத்தப்படும்.

படிகளின் வழியே கோயிலுக்குச் செல்ல பஜனை குழுவினருக்கு அனுமதியில்லை. டிச.31 மாலை 5 மணி முதல், இரவு 8 மணி வரையிலும், ஜன.1 காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் உற்சவ மூர்த்தியை தரிசனம் செய்ய ஏதுவாக யூ டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

www.tnhre.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு சிறப்பு வழி தரிசனத்தில் (ரூ.200) 200 நபர்கள் மற்றும் இலவச பொது தரிசன வழியில் 200 நபர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 4,800 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேரடியாக வருகை தரும்பக்தர்கள், கரோனா அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பொது வழி மற்றும் சிறப்பு வழி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

இரு நாட்களும் கோயில் நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கும், கோயிலில் தங்குவதற்கும் அனுமதி கிடையாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in