

ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கணினிப் பிரிவில் பணிபுரிபவர் காவலர் உஷா. இவர் பேசிய ஆடியோ ஒன்று, நேற்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் பேசிய உஷா, "வேலை பளு தந்து துன்புறுத்துகிறார்கள். இதனால்தான் போலீஸார் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நான் செத்துபோனால் வேறு யாருக்கும் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள முடியுமா? என் அம்மா கேன்சர் நோயாளி. இதனால் விடுப்பு எடுக்க முடியாத நிலை. வேறு இடத்துக்கு பணி மாறுதல் வாங்கி கொண்டு போகச் சொல்கிறார்கள்" என்று கதறியபடி கூறியிருந்தார்.
இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இவ்விசாரணையில், பெண்காவலர் உஷா இதுபோல் பரங்கிமலை காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, பணிகளை செய்யச் சொன்னால் துன்புறுத்துவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதால், ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார் என தெரிய வந்துள்ளது. மேலும்,காவல் நிலையங்களில் உரிய எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாததால், இருக்கிற காவலருக்கு பணிகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணியைத்தான் செய்வேன்என்று கூறமுடியாது என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த உயர் அதிகாரிகள் காவலர் உஷாவுக்கு விடுப்பு தந்து வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம்காவல் துறையினர் மத்தியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.