Published : 29 Oct 2015 01:16 PM
Last Updated : 29 Oct 2015 01:16 PM

டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு அலட்சியம்: கருணாநிதி குற்றச்சாட்டு

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் மட்டுமே அரசு அதிகாரிகள் கவனம் செலுத்துவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகச் சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஒரு கேள்விக்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறையின் அமைச்சர், "முதல்வரின் நடவடிக்கையால்தான் டெங்கு போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மலை வேம்பு, நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றைக் கண்டறிந்து, அதைக் கொடுத்தகாரணத்தினால் இன்றைக்கு தமிழகத்திலே டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

டெல்லியை மிரட்டும் டெங்கு, ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தை நெருங்க அச்சப்படுகிறது" என்று கூறினார். ஆனால் தமிழகத்தில் இப்போது என்ன நிலை?

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை அரசும், மாநகராட்சியும் மறைத்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டு, அமைச்சர்கள் ஆய்வில் அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்றும் தெளிவாகியுள்ளது.

தேனாம்பேட்டை மண்டலத்தில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு கிறித்தவ அறக் கட்டளை மருத்துவமனையில், கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 32 டெங்கு நோயாளிகளும் - அதே மண்டலத்தில் மைலாப்பூரில் உள்ள மற்றொரு கிறித்தவ அறக்கட்டளை மருத்துவமனையில், செப்டம்பர் மாதம் மட்டும் 117 டெங்கு நோயாளிகளும் - அண்ணா நகர் மண்டலம், ஷெனாய்நகரில் உள்ள ஒரு பிரபல மருத்துவ மனையில், செப்டம்பர் மாதம் 40 பேரும் - அடையாறில் உள்ள பிரபல மருத்துவ மனையில் கடந்த ஒன்றரை மாதத்தில் 50 நோயாளிகளுக்கு மேலும் டெங்குவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

அரசு புள்ளி விவரப்படி, டெங்கு பாதிப்பால் ஏற்கனவே 8 பேர் பலியான நிலையில் தற்போது மேலும் இருவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கோவையில் கர்ப்பிணி ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறதாம்.

திருத்தணி அரசு மருத்துவ மனையில் மட்டும் கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று வரை 2,600 பேர் மர்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி 106 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது வாலிபர் 22ஆம் தேதி மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்திருக் கிறார்.

கோவை மருத்துவமனையில் 8 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 120 பேரும், சேலம் மாவட்டத்தில் 38 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரே கூறியிருக்கிறார்.

ஆனால் இதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

சென்னை ராயப்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றரை வயதான பெண் குழந்தை பலியானது. சென்னையில் முடிச்சூரைச் சேர்ந்த 40 வயதான லில்லி, ஆவடியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ரூபேஷ், ராயப்பேட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை பிரஹதித்தா, வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ஷிவானி, கேளம்பாக்கத்தைச் சேர்ந்த குழந்தை ஜுலியட், தர்மபுரியைச் சேர்ந்த எம்.பி.ஏ., மாணவி ஆனந்தி, கரூர் ஒத்தக்கடையைச் சேர்ந்த தர்ஷினி மற்றும் தேசிகா, நெல்லை முக்கூடலைச் சேர்ந்த ரியோ ஜெசி, மற்றும் ஆப்ரகாம் ஆகியோர் பற்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

ஆனால் துறையின் அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்பு கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசும்போது, “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் நோய் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நோய் காரணமாக இறப்பு இல்லாமல் பொதுமக்களைக் காத்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் "சென்னையில் இந்த ஆண்டு இதுவரை 90 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாத்தில், ஒரே ஒரு தனியார் மருத்துவ மனையில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றது தற்போது அம்பலமாகி உள்ளது. சென்னை முழுதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பு சம்பந்தமான தகவல்களை மறைப்பதும் இதன் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது" என்று எழுதியுள்ளது.

அரசு தரப்பில் இருந்து வந்துள்ள அழுத்தம் காரணமாகத் தான் சென்னை மாநகராட்சியினர், டெங்கு காய்ச்சலால் ஒருவர் உண்மையில் இறந்தால் கூட, அதற்கான சான்றிதழைத் தர மறுத்து வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளைக் கொடுக்காமல், மாநில சுகாதாரத் துறையினர் அக்கறையின்றி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்த டெங்கு காய்ச்சல் வரத் தொடங்கியதுமே எதிர்க் கட்சிகள் சார்பில் பல முறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்ட போதிலும், அ.தி.மு.க. ஆட்சியினர் அதிலே அக்கறை காட்டவில்லை.

இதையெல்லாம் உடனுக்குடன் கவனித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய முதலமைச்சரோ, கோடைநாடு முகாமிலிருந்து காணொலி காட்சிகள் வாயிலாகவும், அறிக்கைகள் வாயிலாகவும், அரசு நிர்வாகத்தை நடத்திக் கொண்டு, அன்றாடம் இறந்தவர்கள் இத்தனை பேரின் குடும்பத்திற்கு நிதி வழங்கியதாக ஏடுகளுக்குச் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் தலைநகரிலே இல்லாததால், எந்த அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கே வருவதில்லை; அவரவர் துறை நிர்வாகத்தைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

அரசு நிர்வாகமே அனாதையாகி விட்டது. தலைமை எவ்வழியோ, அவ்வழியே தானே அமைச்சர்களும் நடப்பார்கள்! இந்த அழகில் தான் தமிழகத்திலே ஆட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் எதிர்க் கட்சிகளின் கடமை, இப்படிப்பட்ட தகவல்களை அரசுக்குத் தெரிவிப்பது என்ற வகையில் தான் இத்தனை தகவல்களையும் திரட்டி அளித்துள்ளேன்.

இதற்குப் பிறகும், அரசு நடவடிக்கை எடுக்க முன் வராமல் அலட்சியப்படுத்துமானால், தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி அதோகதி தான்! 2016ஆம் ஆண்டு வருகின்ற பொதுத் தேர்தல் தான் பின்னடைவுகளுக்கெல்லாம் விடிவு ஏற்படுத்தும்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x