

கூட்டாட்சி தத்துவம் பேசும் மத்திய அரசு, எந்த மாநில சார்பும் இல்லா மல், பொதுநிலையில் நின்று, நதிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா.
தஞ்சாவூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் சிறுபான்மையினர், தலித்துகள், சிந்தனையாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் கொள்கையைப் பின்பற்றும் இந்துத்துவ அமைப்புகளே இவற்றை நிகழ்த்தி வருகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது அம்பேத்கரை உரிமை கொண்டாடி வருகிறது. தேர்தல் காலத்தில் தலித் மக்களை ஏமாற்று வதற்காக அம்பேத்கரின் பெயரை இந்துத்துவவாதிகள் உச்சரிப்பது அரசியல் நேர்மையற்ற செயல்.
ஹரியாணாவில் தலித் குழந்தைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் குறித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் பேச்சு கண்டனத்துக்குரியது.
தலித்துகளுக்கு விரோதமான பாஜக வுடன், பிஹாரில் கூட்டணி வைத்து ராம்விலாஸ் பாஸ்வான், மாஞ்சி, அதுவாலே போன்றோர் போட்டியிடுவது சந்தர்ப்பவாத அரசியல்.
இலங்கை இனப்படுகொலை தொடர் பான தமிழக சட்டமன்ற தீர்மானம் குறித்து பிரதமரோ, வெளியுறவுத் துறை அமைச்சரோ ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. தீர்மானத்தின் மீது மத்திய அரசு உரிய அக்கறையை காட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் அழுத்தம் தந்திருக்க வேண்டும்.
காவிரி பிரச்சினையின் நடவடிக்கை யாக மேலாண்மை ஆணையம், நீர் ஒழுங்கு முறைக் குழு அமைக்கப்படாத நிலையில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவம் பேசும் மத்திய அரசு, எந்த மாநில சார்பும் இல்லாமல், பொதுநிலையில் நின்று, நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றார் ராஜா.
கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை.மாணிக் கம், கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.திருஞானம் உடனிருந்தனர்.