

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வில் குழப்பம் உள்ளது. அதிமுக விரைவில் உடையப் போகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் சபைக் கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசும்போது, ‘‘அனைத்து நாளிதழ்களிலும் தமிழக அரசு இரண்டு பக்கங்களில் விளம்பரம் கொடுத்துள்ளது. அதில், எல்லா துறைகளிலும் தமிழகம் முதலில் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். இது அப்பட்டமான பொய். ஆனால், ஊழல், கொலை, கொள்ளையில் தான் முதலிடத்தில் இருக்கிறது. பல கோடிகளில் மக்கள் பணத்தில் விளம்பரம் கொடுத் துள்ளனர். கரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றேன். ஆனால், அதை ஏற்க மறுத்து ரூ.1,000 கொடுத்தார்கள். இப்போது தேர்தல் வரப்போகிறது என்பதால் மக்களை ஏமாற்ற பொங்கலுக்காக ரூ.2,500 கொடுப் பதாக அறிவித்துள்ளனர்.
முதலமைச்சர் பழனிசாமி இன்று (நேற்று) பேட்டி கொடுக்கும்போது, ரூ.2,500 பணம் கொடுப்பதை திமுக எதிர்ப்பதாக கூறியுள்ளார். சத்தியமாக, அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன், பணம் கொடுப்பதை திமுக தடுக்க நினைக்கவில்லை. இது அரசாங்கத்தின் பணம் என்பதால் முறையாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும். பழனிசாமி அவர்களே, பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் கிராம சபையில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து ஸ்டாலின் பேசும்போது, ‘‘அதிமுகவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் கூடிப்பேசி முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமி தான் என்று அறிவித்து விட்டனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர் வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என அமைச்சர்கள் சிலர் கூறுகின்றனர். அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட் பாளர் என்பதில் குழப்பம் இருக்கிறது. அதிமுக விரைவில் உடையப் போகிறது’’ என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் மு.க.ஸ்டாலினுக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி வெள்ளி செங் கோல் வழங்கினார். பின்னர், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற கையெழுத்து இயக் கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.