Published : 29 Dec 2020 08:41 PM
Last Updated : 29 Dec 2020 08:41 PM

மக்கள் கொடுத்த மனுக்கள்; பழனிசாமி அரசிடம்தான் அளித்தோம்: என்ன செய்தீர்கள்?- ஸ்டாலின் கேள்வி

சென்னை

மக்கள் மனு கொடுத்தால் குப்பைத் தொட்டியில் போடுவது முதல்வர் பழனிசாமியின் பழக்கமாக இருக்கலாம். நாங்கள் அரசிடம்தான் கொடுத்தோம். திமுக அரசு அமைந்தவுடன் அந்த மனுக்களைத் தூசு தட்டி எடுத்துக் குறைகளைத் தீர்த்து வைப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

“குறைந்தபட்ச ஆதார விலைக்காக இந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் போராடி வருகிறார்கள் விவசாயிகள். ஆனால், 1974ஆம் ஆண்டே ஆதார விலைக்கும் கூடுதலான விலையைத் தமிழக விவசாயிகளுக்குக் கொடுத்தவர்தான் நம் தலைவர் கருணாநிதி.

விவசாயிகளுக்கு அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை என்பதை மத்திய அரசு நிர்ணயித்தது. அந்த விலை போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தார்கள்.

1974ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதும் இதே கோரிக்கையை விவசாயிகள் வைத்தார்கள். அப்போது கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்குக் கருணாநிதி கொண்டு சென்றார். அதாவது கருணாநிதியே, விவசாயிகளின் பிரதிநிதியாக மாறி டெல்லிக்குச் சென்றார்.

அன்றைக்கு வேளாண்துறை அமைச்சராக இருந்தவர் பாபு ஜெகஜீவன் ராம். அவரைக் கருணாநிதி சந்தித்தார். 'கொள்முதல் விலையை அதிகப்படுத்த வேண்டும், இது குறைவாக இருப்பதாக விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்' என்று கருணாநிதி வாதிட்டார். ஆனால், கொள்முதல் விலையை அதிகப்படுத்த இயலாத சூழல் இருப்பதை பாபு ஜெகஜீவன்ராம் சொன்னார். தலைவர் கருணாநிதி இதனை ஏற்கவில்லை.

'விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அவர்களுக்கு நன்மை செய்தாக வேண்டும்' என்று முதல்வர் கருணாநிதி விடாமல் வலியுறுத்தினார். அப்போது அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம், தலைவர் கருணாநிதியிடத்திலே ஒரு ஆலோசனையைச் சொன்னார்.

'விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரால், போக்குவரத்துச் செலவு என்ற பெயரால் மாநில அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துக் கொள்ளுங்கள்' என்று பாபு ஜெகஜீவன் ராம் ஆலோசனை சொன்னார்.

தமிழகம் திரும்பிய தலைவர் கருணாநிதி, உடனடியாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. கொடுத்த ஆட்சி திமுக ஆட்சி. கொடுத்த தலைவர் முதல்வர் கருணாநிதி.

குவிண்டால் ஒன்றுக்கு கொள்முதல் விலையையும் சேர்த்து 15 ரூபாயை ஊக்கத்தொகையாக முதல்வர் கருணாநிதி வழங்கினார். அதற்கு போனஸ்- ஊக்கத்தொகை- போக்குவரத்துத் தொகை என்று சொல்லி வழங்கினார்.

இது எமர்ஜென்சி காலட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. 1977 - திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் நெல் கொள்முதலுக்குத் திமுக அரசு விவசாயிகளுக்கு அளித்து வந்த போனஸ் திரும்பவும் தர ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று அறிவித்தது.

மீண்டும் ஆட்சிக்கு வந்த தலைவர் முதல்வர் கருணாநிதி, 1990ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்கினார். 1 கிலோ மீட்டருக்குள் ரேஷன் கடைகளை அமைத்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுத்தார். கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்தார். உழவர் சந்தைகளை உருவாக்கினார்.

2006ஆம் ஆண்டு ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று அறிவித்தார் தலைவர் கருணாநிதி. ஆட்சிக்கு வந்ததும் ஒரு ரூபாய் ஆக்கினார். ரேஷன் அரிசி வாங்குபவர்கள் தொகை அதிகம் ஆனது அதனால்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், பட்டினிச் சாவு உள்ள மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்தது. அதில் தமிழ்நாடு இல்லை. ஏன் இல்லை? தலைவர் கருணாநிதி ஆட்சி செய்த மாநிலத்தில் பட்டினிச் சாவு எப்படி இருக்கும்? அதனால் இல்லை.

தமிழகத்தின் மிக முக்கியமான பொருளாதார அறிஞரான ஜெயரஞ்சன், இந்தியப் பொருளாதார மாற்றங்கள் என்பது பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து அருமையாகப் பேசக் கூடிய பொருளாதார அறிஞர் அவர். உங்களில் பலரும் அவரது பேட்டிகளை - விவாதங்களைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம். அவர் எழுதி இருக்கிறார், 'திமுக ஆட்சியை மணிமேகலையின் கையில் உள்ள அட்சயப் பாத்திரத்துக்கு இணையானது' என்று எழுதி இருக்கிறார். தலைவர் கருணாநிதியை 'நவீன மணிமேகலை' என்று எழுதி இருக்கிறார்!

'உங்களுக்குப் பிடித்த இலக்கியப் பாத்திரம் எது?' என்று தலைவரைக் கேட்டபோது, 'மணிமேகலையின் அட்சயப் பாத்திரம்' என்றார். அவரே மணிமேகலையாக வாழ்ந்தார். அதனால்தான் தமிழகம் பசியற்ற, பஞ்சம் அற்ற சமூகமாக வளர்ந்தது. உயர்ந்தது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் கையில் இருக்கும் அட்சயப் பாத்திரத்தைப் பறித்துவிட்டு, மீண்டும் பிச்சைப் பாத்திரத்தைக் கொடுத்துவிடத் துடிக்கிறார்கள்.

இலவச அரிசியில் ஊழல். மக்களுக்காக மத்திய அரசு கொடுத்த அரிசியையே விற்றுவிட்டார் உணவுத் துறை அமைச்சர் காமராஜ். பருப்பு ஊழல், காவிரி விவசாயிகளுக்குத் துரோகம், மூன்று வேளாண் சட்டத்துக்கு ஆதரவு. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பைக் கிடப்பில் போட்டார்கள். இப்படி பழனிசாமியின் துரோகத்தை சொல்லிக்கொண்டே போகலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, திமுகவை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு தன்னைத் தானே கொச்சைப்படுத்தி இருக்கிறார். கரோனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற அடிப்படையில் ஒரு திட்டத்தைத் தொடங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தோம். அரசாங்கம் செய்ய வேண்டியதைப் பொதுமக்கள் மனுக்களாக எங்களிடம் கொடுத்தார்கள்.

அந்த மனுக்களைத் தலைமைச் செயலாளரைச் சந்தித்துக் கொடுத்தோம். உரிய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கொடுத்துவிட்டோம். இவை அனைத்தும் அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள். அதனை இந்த அரசு செய்து கொடுத்ததா என்றால் இல்லை! செய்துகொடுக்க முயன்றார்களா என்றால் அதுவும் இல்லை.

‘உங்களிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டால், உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டால், அதை யார் கொடுத்தது என்று பார்க்காதீர்கள். என்ன கோரிக்கை என்று மட்டும் பாருங்கள். செயல்படுத்திக் கொடுங்கள்' என்று தலைவர் கருணாநிதிதான் சொல்வார். ஆனால், அதிமுக அரசு, திமுக சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை மதிக்கவில்லை.

திமுகவை மதிக்கவில்லை என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எடப்பாடியிடம் மரியாதை பெற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்களை பழனிசாமி மதித்தாரா? அந்த மக்களால்தான் அவர் முதல்வராக இருக்கிறார். அவர்கள் வாக்களித்ததால்தான் அதிமுக ஆளும்கட்சியாக இருக்கிறது. இந்த நன்றியுணர்ச்சி கொஞ்சமாவது அவருக்கு இருந்திருக்க வேண்டும். அவருக்கும் நன்றியுணர்ச்சிக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை என்பதன் அடையாளம்தான் அவரது பேச்சு.

முதல்வர் பழனிசாமி பேசி இருக்கிறார். "மக்களிடம் மு.க.ஸ்டாலின் மனுக்களை வாங்கினார். அந்த மனுக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்குத்தான் போனது" என்று சொல்லி இருக்கிறார். மக்களிடம் பெற்ற மனுக்களைத் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரிடம்தான் கொடுத்தோம். ஆனால், அது குப்பைத் தொட்டிக்குப் போனது என்று பழனிசாமி சொல்கிறார் என்றால் அவர் ஆட்சி செய்யும் தலைமைச் செயலகத்தைக் குப்பைத் தொட்டி என்கிறாரா?

தான் உட்கார்ந்து இருப்பதால் அது குப்பைத் தொட்டியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறாரா? எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள் மனு வாங்கினால் அதனைச் சம்பந்தப்பட்ட துறைக்குதான் அனுப்ப முடியும்? அது மக்களுக்கும் தெரியும். இது கூடவா மக்களுக்குத் தெரியாது.

அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கும். எதிர்க்கட்சித் தலைவரிடம் மனு கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்களா தமிழ்நாட்டு மக்கள்? மக்கள் மனு கொடுத்தால் குப்பைத் தொட்டியில் போடுவது பழனிசாமியின் பழக்கமாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அரசாங்கத்திடம்தான் கொடுத்துள்ளோம். அரசாங்கம் எங்கள் கைக்கு வந்ததும் அந்த மனுக்கள் தூசி தட்டி எடுக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை எனது வாக்குறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மூன்றாவது முறையும் ஆட்சிக்கு வருவோம் என்று முழங்கி இருக்கிறார் பழனிசாமி. அதிமுக என்ற கட்சியையே தனது நாற்காலியைக் காக்க, தான் கொள்ளையடிக்க, தான் தப்பிக்க பாஜக அரசிடம் அடமானம் வைத்துவிட்ட பழனிசாமிக்கு எம்.ஜி.ஆரைப் பற்றியோ, ஜெயலலிதாவைப் பற்றியோ பேசுவதற்குக் கூட அருகதை இல்லை. இதனை உண்மையான அதிமுக தொண்டர்கள் உணர்வார்கள். தன் மீதான கொள்ளை வழக்கில் இருந்து தப்புவதற்காக பாஜகவின் பாதம் தாங்கிக் கிடக்கும் பழனிசாமியை, பாஜகவே வஞ்சம் தீர்த்துவிடும்.

கபட நடிப்பால் பதவியைப் பெற்று - வஞ்சகத்தால் துரோகம் செய்து - சுயநலத்தால் அதிமுகவை அடமானம் வைத்தவர் பழனிசாமி என்பதை உண்மை அதிமுக தொண்டர்கள் மறக்க மாட்டார்கள். சுயநலத்துக்காக அடமானம் வைக்க அதிமுக என்பது பழனிசாமியின் பரம்பரைச் சொத்து அல்ல என்பதை அந்தத் தொண்டர்கள் உணர்ந்துவிட்டார்கள்.

அதிமுக ஆட்சி 100 ஆண்டுகள் இருக்கும் என்று ஜெயலலிதா சொன்னதாக பழனிசாமி சொல்கிறார். அவர் இறந்த சில நாட்களிலேயே இரட்டை இலையைப் பறிகொடுத்தவர் பழனிசாமி. சில தகிடு தத்தங்கள் மூலமாக திரும்பப் பெற்றவர். அதிமுக என்ற கட்சிக்கு பொதுச் செயலாளர் போடாதவர் பழனிசாமி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் 38 இடம் தோற்றவர் பழனிசாமி.

நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் தோற்றவர் பழனிசாமி. நடந்து முடிந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60 சதவீத இடங்களில் தோற்றவர் பழனிசாமி. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முதுகெலும்பு இல்லாதவர் பழனிசாமி.

கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தலை முறையாக நடத்த முடியாதவர் பழனிசாமி. இப்படிப்பட்ட பழனிசாமிதான், மூன்றாம் முறையாக அதிமுகவை ஜெயிக்க வைக்கப் போகிறாராம். அவர் முதல்வர் வேட்பாளராகக் கூட நீடிக்க முடியாது என்பதைத்தான் பாஜகவினர் தினமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த பயத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஏதோ உளறிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் அரசு என்பது கொள்கை அரசு அல்ல, கொள்ளை அரசு. எடப்பாடி பழனிசாமியின் அரசு சேவை அரசு அல்ல; சுரண்டல் அரசு. இது எம்.ஜி.ஆர். அரசு அல்ல; ஜெயலலிதா அரசும் அல்ல. இந்த எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுதாரணம் இல்லை. அவருக்கு முன்னுதாரணம் அவர்தான். மோசமான பழனிசாமிக்கு உதாரணம், மிக மோசமான பழனிசாமிதான்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x