பாஜக அரசியல் கட்சியாக செயல்படவில்லை; முரட்டுத்தனமான எந்திரமாக செயல்படுகிறது: ப.சிதம்பரம்

பாஜக அரசியல் கட்சியாக செயல்படவில்லை; முரட்டுத்தனமான எந்திரமாக செயல்படுகிறது: ப.சிதம்பரம்
Updated on
1 min read

‘‘மாநிலப் பட்டியலை மத்திய அரசு சிதைக்கிறது. பாஜக அரசியல் கட்சியாக செயல்படவில்லை; முரட்டுத்தனமான எந்திரமாக செயல்படுகிறது’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.

அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் பேசியதாவது: கரோனா தொற்று மெய்ஞானம், விஞ்ஞானம் முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளது. விஞ்ஞானிகள் முயற்சியால் 9 மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான் எழுதும் கட்டுரைகளை தமிழில் வெளியிட ஊடகத்துறைக்கு தைரியம் இல்லை.

யாருக்கும் பணிய மாட்டார் பிரதமர் என மத்திய அமைச்சரே கூறுகிறார். இது தவறு. கேரளா மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை மாற்றுக்கின்றனர். அதனால் தான் அங்கு தொழில் வளர்ச்சி நன்றாக உள்ளது. தற்போது சுதந்திரத்திற்கு ஆபத்தில்லை, குடியரசுக்கு தான் ஆபத்து வந்துள்ளது.

வேலைவாய்ப்பைத் தேடி மக்கள் இடம் பெயர்வது, நல்ல அரசு இல்லை என்பதையே காட்டுகிறது. ஏழை விவசாயிகள் பலருக்கு ரூ.6 ஆயிரம் போய்ச் சேரவில்லை. இந்தத் திட்டத்தில் நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகளுக்கு பணம் கிடையாது.

அரசை எதிர்த்துப் பேசினால் வழக்கு, சிறை தான். ஜனநாயகம் நாளுக்கு நாள் சிதைக்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண் திருத்தச் சட்டத்தைக் கேட்கவில்லை. இந்த சட்டத்தில் ஜனநாயகம் இல்லை. நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை, வாக்குரிமை கிடையாது. போராடுபவர்களை தீவரவாதிகள் என கொச்சைப்படுத்துவது வேதனையாக உள்ளது.

அதிமுக, பாஜக கூட்டணி இறுதியானால் நமது கூட்டணிக்கு வெற்றி நிச்சயம். மாநிலப் பட்டியலை மத்திய அரசு சிதைக்கிறது. ‘வேல் யாத்திரை தேவையில்லை, வேலை யாத்திரை தான் வேண்டும்,’ என கமல் கூறியதை வரவேற்கிறேன்.

கரோனாவால் 13 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 100 நாள் வேலைத் திட்டத்தால் தான் ஏழைகள் உயிர் வாழ்கின்றனர். சீனா, இந்திய எல்லையில் ஊடுறுவி ஆக்கிரமிப்பு செய்துள்ளது. ஆனால் அதை மத்திய அரசு மறுக்கிறது.

பெண்கள், குழந்தைகளுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அரசு அமைய வேண்டும். மோடி வாஜ்பாயை போன்று ஜனநாயகவாதி அல்ல.

பாஜக அரசியல் கட்சியாக செயல்படவில்லை. முரட்டுத்தனமாக எந்திரமாக செயல்படுகிறது. இந்திய வம்சாவழியை (தமிழர்) சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அதை இந்தியாவில் பாஜகா ஏற்குமா? பாஜக சகிப்புத்தன்மை இல்லாத கட்சி, என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in