

சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று கல்வி கற்பிக்க வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 9 மாதங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரில் சென்று மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.30) நடக்கிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கரோனா தொற்று பரவாமல் இருக்க தான் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் கிராமம், கிராமமாக சென்று பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது சிரமம்.
பெற்றோரும் இதற்கு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத இந்த நடைமுறையை அதிகாரிகள் கைவிட வேண்டும், என்று கூறினர்.