Published : 29 Dec 2020 05:35 PM
Last Updated : 29 Dec 2020 05:35 PM

இந்தியாவுக்கு முன்னுதாரணமாக தமிழக 11, 12-ம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் உள்ளன: அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

தமிழகத்தின் 11, 12-ம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவில்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலை வகித்தார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் என மொத்தம் 5 மாவட்டங்களை சேர்ந்த 358 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, "முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டம் தந்து சரித்திரம் படைத்தவர். அடித்தட்டு மக்களின் பசியைக் களைந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வி வளர்ச்சிக்காக செய்த திட்டங்களால் 78 சதவித மாணவர்கள் படிக்க வருகை தந்த மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றது.

தற்போது தமிழக மாணவர்கள் நீட் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கே முன்னுதாரணமாக உள்ளது.

தமிழக 11, 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தை டெல்லி ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிலுபவர்களும் பெற்று பயன்படுத்தும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாளில் 172 கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்துள்ளது. அத்தனை சிறப்பு பெற்ற பாடத்திட்டமாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் நீட்டிப்பு ஆணை பெறும் இடர்பாடுகளை களைந்து, அவர்கள் இருக்கும் பகுதிக்கே வந்து இந்த ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நீட்டிப்பை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக உயர்த்தும் திட்டமும் நடவடிக்கையில் உள்ளது.

அரசு சார்பு பள்ளிகளுக்கான நிதி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் கட்டட அங்கீகாரம் பெற்றால் உடனடியாக அவர்களுக்கு நிரந்தர உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆணைகள் வழங்கப்படுகின்றன.

அரசு பள்ளிகளின் தரம் இல்லை என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. மருத்துவ இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவித இட ஒதுக்கீட்டினை தமிழக முதல்வர், கொண்டு வந்ததால் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் இந்த ஆண்டில் சேர்ந்து சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் கொண்டு வந்துள்ள குடிமராமத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் மழை நீர் அனைத்தும் சேமிக்கப்பட்டு வெள்ள சேதம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வர் விவசாயி என்ற முறையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழகம் பாதுகாப்பான மாநிலம், தொழில் தொடங்க ஏற்ற மாநிலம் என்ற நிலையை எட்டியதால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகி வருகிறது.

பெரிய அளவிலான கல்வி புரட்சியும், சாதி மத பேதமற்ற சமுதாயம் அமைந்திடவும் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்திடவும் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்றார் அவர்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், தொடக்க கல்வி இயக்குநர் எம்.பழனிசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத்தலைவர் பழனிசாமி மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளித்துறை அலுவலர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x