Published : 03 Oct 2015 07:48 AM
Last Updated : 03 Oct 2015 07:48 AM

2-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.30 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

சுங்கச்சாவடிகளை அகற்றவேண் டும், சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.

இதன் பாதிப்பு தமிழகத்திலும் எதிரொலிக்க தொடங்கியது. நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்ததால் பொருட்கள் வரத்து குறையத் தொடங்கியது. தமிழகத்தில் சுமார் 7 லட்சம் சரக்கு வாகனங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் சரக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில், ரூ.2000 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து தினமும் 250 லாரிகளில் வரும் பருப்பு வகைகள், பூண்டு, வெங்காயம், கோதுமை போன்ற உணவுப் பொருள்கள் கடந்த 2 நாட்களாக வரவில்லை. அதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது என்கிறார் சேலம் மாவட்ட லாரிகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்ன கேசவன். லாரி டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் இந்த தொழிலை நம்பி உள்ள சுமார் 2 லட்சம் பேர் சேலம் மாவட்டத்தில் வேலையிழந்துள்ளனர்.

ஈரோடு, நாமக்கல் மாவட்டங் களில் சரக்கு லாரி போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. வெளிமாநில லாரிகள் வருகை முற்றிலுமாக தடைபட்டுவிட்டது.

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், ஜவுளி, அரிசி, எண்ணெய், கட்டுமான பொருட்கள் போன்ற அனைத்தும் கிடங்குகளிலேயே தேங்கி கிடக்கின்றன.

போராட்டம் குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கே.நல்லதம்பி கூறும் போது, ‘லாரி உரிமையாளர்களின் போராட்டம் தமிழக அரசுக்கு எதி ரானது அல்ல. எங்களது கோரிக்கை முற்றிலும் மத்திய அரசு தொடர் பானது. தமிழகம் முழுவதும் 7 லட்சம் லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்ளன. இவை அனைத் தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன. வேலைநிறுத்தப் போராட் டத்தால் தமிழகத்தில் லாரி உரிமை யாளர்களுக்கு ரூ.20 கோடி, மாநில அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை இருப்பு வைத்தால் பெரும் நஷ் டம் ஏற்படும் என்பதால், சொந்த மாக லாரி வைத்துள்ள பண்ணையாளர்கள் கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு நேற்று அதிகாலை முதல் முட்டைகளை அனுப்பினர்.

கிருஷ்ணகிரியில் 75 சதவீதம் லாரிகள் இயங்கவில்லை. தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.8 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கோவை

கோவையைப் பொறுத்தவரை 25 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இங்கிருந்து வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள், பழங்கள், பூக்கள், உணவுப் பொருட்கள், ஜவுளி உற்பத்திப் பொருட்கள், இயந்திர உதிரிப்பாகங்கள், மோட்டார் பம்ப் பொருட்கள் ஆகியவை தேங்கியுள்ளன. இரு நாட்களில் வர்த்தக பாதிப்பு ரூ. 500 கோடியை எட்டும் என கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எஸ்.கலியபெருமாள் தெரிவித்தார்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.250 கோடி வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளது. 1,500 லாரிகள் ஓடவில்லை.

கறிக்கோழி, தேங்காய், நூல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தேக்கமடைந்துள்ளதால், ரூ.250 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட் டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2-வது நாளாக நேற்று வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்துக்கும், அங்குள்ள குடோன்களுக்கும் இடையேயான லாரி போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் லாரிகள் இரண்டாவது நாளாக நேற்றும் ஓடவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேங்கின. கரூர் மாவட்டத்தில் 2,000 லாரிகள் மற்றும் 600 மினி லாரிகள் ஓடாததால் ரூ.15 கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கின. தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.

மதுரை

மதுரைக்கு காய்கறிகள், பழங்கள் சந்தைகளுக்கு வரவில்லை. சிறு, குறு தொழிற் சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களும் வராததால் மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு தினமும் அனுப்பப்படும் அரிசி, பருப்பு, காய்கறிகள், இறைச்சி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் 20 டன் தேக்கம் அடைந்துள்ளன. 2 நாளாக நீடித்த வேலைநிறுத்தம் காரணமாக ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்துக்கு பருப்பு வகைகள் கொண்டு வருவதும், அரவை முடிக்கப்பட்ட பருப்பு வகைகள், மளிகைப் பொருட்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து பட்டாசுகளை கொண்டு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.எல்லப்பன் கூறும்போது, திண் டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடி வரை வர்த்தகம் பாதிக் கப்பட்டுள்ளது. காய்கறிகள், தேங் காய்கள், சணல் பொருட்கள் அனுப்புவது நிறுத்திவைக்கப்பட் டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x