

தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்று நாகையில் கமலஹாசன் பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'தலை நிமிரும் தமிழகம்' என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று (டிச. 28) திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு இரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்த அவர், அங்கு உள்ள ஒரு தனியார் உணவகத்தில் தங்கினார். இன்று (டிச. 29) காலை வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் மகளிருடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"எவ்வளவு மரியாதையாக பேசினாலும் சில அரசியல்வாதிகள் மரியாதை இல்லாமல் பேசுவார்கள். இதிலிருந்து நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்று தெரிந்து விடும். அதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
நான் பழிவாங்கும் அரசியல்வாதி அல்ல. பழி போடும் அரசியல்வாதி அல்ல. வழிகாட்டும் அரசியல்வாதி.
இங்கு வந்துள்ள மகளிர் பாதுகாப்பாக உள்ளார்கள் என்று உணருகிறேன். மற்ற கூட்டங்களுக்கு வருபவர்கள் காசு கொடுத்து அழைத்து வரப்படுகிறார்கள். இங்கு வருபவர்கள் யாருக்கும் காசு கொடுக்கப்படவில்லை. இது கூட்டம் அல்ல. நமது குடும்பம். இங்கு பேசப்படும் செய்தியை 100 நபர்களிடம் கொண்டு சேர்த்தால் போதும். நமது வேலை எளிதாக முடிந்து விடும்.
ஆண்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் பெண்கள் எளிதாக சென்று விடுவார்கள். அதனால்தான் மக்கள் நீதி மய்யத்தின் கருத்துக்களை பெண்களிடம் எடுத்து சொல்கிறேன். மக்கள் நீதி மய்யம் பெண்களுக்கு மரியாதை தருகிறது. ஆனால், இந்த அரசு பெண்களுக்கு பாதுகாப்பு தரவில்லை. பெண்களுக்கு எதிராக நடப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கவில்லை. அதனால்தான் ரவுடியிசம் பெருகி வருகிறது.
பொள்ளாச்சி சம்பவத்தில் 600 நாட்களை கடந்தும் தண்டனை வழங்கப்படாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். விவசாய நிலங்களை வேறு பணிகளுக்கு குத்தகை விடுவதை நான் அறிகிறேன். மக்கள் நீதி மய்யம் ஒரு போதும் நமது நலனை விட்டுக் கொடுத்து ஒத்து ஊதும் அரசாக இருக்காது".
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மகளிருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் கிளம்பிய கமல்ஹாசன், புத்தூர் ரவுண்டானாவில் கொட்டும் மழையில் சிரித்தவாறு அங்கு நின்ற பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்தபடி சென்றார். அபிராமி அம்மன் திடலில் பேசினார். அங்கிருந்து புறப்பட்டு நாகூருக்கு வந்தார்.
அங்கு கொட்டும் மழையில் குடை பிடித்தபடி காத்திருந்த பொதுமக்களிடையே அவர் பேசுகையில், "நாகை நகராட்சியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யாமல் இருப்பதை கண்டித்து கடையடைப்பு நடத்தியதை அறிந்தேன். கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்து மக்கள் சிரமம் அடைந்ததையும் அறிந்தேன். இதற்கான மாற்றத்தை எல்லாம் மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும். தமிழக மக்கள் மாற்றத்துக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்களுடன் இணையுங்கள்" என பேசினார்.
அங்கிருந்து திட்டச்சேரி, திருமருகல் வழியாக மயிலாடுதுறை சென்றார்.