

2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது திருச்சி மாவட்டத்தில் பயன்படுத்தவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணி திருச்சியில் இன்று தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, லால்குடி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய 9 தொகுதிகள் உள்ளன. இந்த 9 தொகுதிகளிலும் மொத்தம் 3,341 வாக்குச்சாவடிகள் அமையவுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 5,686 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,341 கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களிப்பதை உறுதி செய்யும் 4,686 கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே 4,466 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 851 கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களிப்பதை உறுதி செய்யும் 126 கருவிகள் ஆகியன இருந்த நிலையில், எஞ்சியவையும் கடந்த சில நாட்களுக்கு முன் வரப் பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்கெனவே உள்ள பதிவுகளை அழிப்பது மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வது ஆகிய பணிகள் இன்று (டிச.29) தொடங்கின. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் பொறியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் ஆட்சியர் சு.சிவராசு கூறியதாவது:
"2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் பயன்படுத்துவதற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகள் அனைத்தும் ஏற்கெனவே வரப்பெற்றுவிட்டன.
அதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பழைய பதிவுகளை அழிக்கும் பணியும், மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்று ஆய்வு செய்து உறுதி செய்யும் பணிகளும் இன்று தொடங்கியுள்ளன.
15 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பணிகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேரில் கண்காணிக்கலாம். ஆய்வுப் பணிகள் முடிந்த பிறகு அனைத்துக் கருவிகளும் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதமும், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகள் 180 சதவீதமும் என வாக்குப்பதிவுக்குத் தேவையான கருவிகள் போதிய அளவில் உள்ளன".
இவ்வாறு ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
ஆய்வின்போது திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.