

ரஜினி எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக தொடங்கிய பின்னர் 10 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளோம். இதில், நாங்கள் 7 முறை வெற்றி பெற்றுள்ளோம்.
எங்களுக்குப் போட்டி திமுக தான். இதற்கிடையே ஏராளமான கட்சிகள் தோன்றின. எத்தனை கட்சிகள் வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. அதிமுக அரசின் மீது அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் திருப்தியாக உள்ளனர். 2021-ம் ஆண்டிலும் எங்களுக்குத் தொடர் வெற்றியைத் தர தயாராக உள்ளனர்.
யார் கட்சி தொடங்கினாலும் கவலையில்லை. அதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ளது என நாங்கள் கூறினோம். இதே போல், திமுகவும் கூறியிருந்தால் அவர்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் எனக் கூறலாம்.
நமது வெற்றி எளிதல்ல என மு.க.ஸ்டாலின், அவரது தொண்டர்களுக்கு இடையே காணொளியில் கூறுகிறார். அந்த வகையில், ஸ்டாலின் இதை சரியாக கணித்துள்ளார்.
இப்போதும் நாங்கள் சொல்கிறோம் அவர்கள் எளிதாக வெற்றி பெறப் போவதில்லை. முடியாது என்பதை ஸ்டாலினே ஒப்புக்கொண்டுள்ளார்.
ரஜினி கட்சி தொடங்குவதைப் பற்றி அதிமுகவினர் யாரும் விமர்சிக்கவில்லை. அதனால், இன்றைய அவரது முடிவு எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம்.
பழுத்த மரம் தான் கல் அடிபடும். அதிமுக பழுத்த மரமாக உள்ளது. அதனால் அதிமுகவை பற்றி பேசினால் தான் மக்கள் கமல்ஹாசனை நினைப்பார்கள். மனிதநேயத்தின் உச்சகட்டமாக பெண் இனம் காக்கப்பட வேண்டுமென கூறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய திட்டம் தொட்டில் குழந்தை திட்டம். இதனை அன்னை தெரசா பாராட்டி உள்ளார். கமலஹாசன் தொட்டில் குழந்தை திட்டத்தை நினைவு கூர்ந்தால் சரி. இந்தத் திட்டம் வந்த பின்னர் ஒரு பெண் சிசு கூட அழிக்கப்படவில்லை என்ற வரலாற்றை ஜெயலலிதா உருவாக்கினார். இந்த திட்டமெல்லாம் கமல்ஹாசனுக்கு தெரியவில்லையென்றால், அவர் எங்கே இருந்தார். நிதானத்தில் இருக்கிறாரா என்பது அவருக்கு தான் தெரியும், என்றார்.