

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. தென்காசி மாவட்டத்தில் திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் ஏராளமான கூட்டங்களை நடத்தி வருகிறது.
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். முதல் நாளான இன்று தென்காசி வடக்கு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். கரிவலம்வந்தநல்லூர் வந்த அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கோமதிமுத்துபுரத்தில் மக்களைச் சந்தித்த கனிமொழி, அங்கு உள்ள ஊர்புற நூலகத்துக்கு சென்று, பார்வையிட்டு வாசகர்களிடம் உரையாடினார்.
நூலகத்துக்கு தனி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ராயகிரியில் திமுக கொடியேற்றி, அப்பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கர் சமுதாய மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அவர் பேசும்போது, ‘‘காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் ஜாதி சான்றிதழ் பெற முடியாமல் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்தவித சிரமமுமின்றி ஜாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. படித்த இளம்பெண்கள், இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர்.
தமிழகத்தில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. தொழில் முதலீடுகள் வரவில்லை. ஆட்சியாளர்களுக்கு திறமையும் இல்லை, மக்களைப் பற்றிய கவலையும் இல்லை. திமுக ஆட்சியில் பல தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன. படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன.
விரைவில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி ஏற்படும். திமுக ஆட்சியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம். திமுக வாக்குறுதி அளித்தால் அதை நிறைவேற்றும். திமுக ஆட்சியில் சுய உதவிக் குழுக்கள் இன்னும் சிறப்பாக செயல்படுத்தப்படும்” என்றார்.
வாசுதேவநல்லூர் வயல் பகுதியில் நெற்பயிருக்கு களையெடுக்கும் பணியில் ஈடுபட்ட பெண்களுடன் கலந்துரையாடினார். பின்னர் சிவகிரியில் சுயஉதவிக் குழுவினர் மத்தியில் பேசும்போது, “கரோனா காலத்தில் சுயஉதவிக் குழுவினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கடனுதவி, சுழல்நிதி வழங்கப்படவில்லை. சிலர் தனியாரிடம் கடன் வாங்கினார்கள்.
அவர்கள் கந்து வட்டி போட்டு கட்டாய வசூலில் ஈடுபட்டனர். பொது கழிப்பிடம், பள்ளி வகுப்பறை, நூலகம் போன்ற வசதிகளை எம்பி நிதியில் இருந்து கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தீர்கள். அனைத்தையும் செய்து தர வேண்டும் என்று எங்களுக்கு ஆசை தான். ஆனால், கரோனாவை காரணம் காட்டி மோடி அரசு எம்பி நிதியை நிறுத்திவிட்டது. மக்களுக்கு பயன்படக்கூடிய நிதியை நிறுத்திவிட்டு 20 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
மத்திய அரசின் தவறுகளை தட்டிக்கேட்க தமிழக ஆட்சியாளர்களுக்கு எந்த தைரியமும் இல்லை. சசிகலா காலில் விழுந்து முதல்வரான பழனிசாமி இப்போது பதவிக்காக மோடி, அமித்ஷா காலில் விழுந்து கிடக்கிறார்.
பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ சுயஉதவிக் குழுக்களை கருணாநிதி உருவாக்கினார். பெண்களுக்கு தொழிற்பயிற்சிகள் அளித்து, சுழல் நிதி, மானியம் வழங்கப்பட்டது.
ஆனால், இப்போது சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கவில்லை. மானியம், கடனுதவி வழங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் சுயஉதவிக்குழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்படவும், மானியம், சுழல்நிதி வழங்கி ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.