

பொங்கல் பரிசாக ரூ.2,500 பணம் கொடுப்பதை அண்ணா மீது ஆணையாகத் தடுக்க நினைக்கவில்லை என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அனந்தலை கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் இன்று (டிச.29) நடைபெற்றது.
இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசும்போது, "இன்று அனைத்து நாளிதழ்களிலும் தமிழக அரசு இரண்டு பக்கங்களில் விளம்பரம் கொடுத்துள்ளது. அதில், எல்லாத் துறைகளிலும் தமிழகம் முதலில் இருப்பதாகக் கூறி இருக்கிறார்கள். இது அப்பட்டமான பொய். ஆனால், ஊழல், கொலை, கொள்ளையில்தான் முதலிடத்தில் இருக்கிறது. பல கோடிகளில் மக்கள் பணத்தில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா முதல்வராக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். அப்போது, நமக்கும் அவர்களுக்கும் 1 சதவீதம் வாக்குகள்தான் வித்தியாசம். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்க்கட்சியாக திமுக மாறியது. எந்த நேரத்திலும் கவிழும் என்ற நிலையில் ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா உடல் நலிவுற்றார். மருத்துவமனையில் அவருக்கு என்ன சிகிச்சை அளித்தார்கள் என்று தெரியாது. திடீரென ஒரு நாள் அவர் மறைந்துவிட்டார்.
ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நீதி விசாரணை வேண்டும் என்று கேட்ட ஓ.பன்னீர்செல்வம் இப்போது துணை முதல்வராக இருக்கிறார். அவர் கேட்டதால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் முதல் வேலையாக இருக்கும்.
கரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றேன். ஆனால், அதை ஏற்க மறுத்து ரூ.1,000 கொடுத்தார்கள். இப்போது தேர்தல் வரப்போகிறது என்பதால் மக்களை ஏமாற்ற பொங்கலுக்காக ரூ.2,500 கொடுப்பதாக அறிவித்துள்ளனர். அரசின் பணத்தை அதிமுக கொடுப்பது மாதிரி ஒவ்வொரு இடத்திலும் முதல்வர் படத்துடன் தொகுதி எம்எல்ஏ, மாவட்ட அமைச்சரின் படத்துடன் அதிமுகவினரே கொடுத்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்களின் பணியை அதிமுகவினர் செய்வது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகாராகக் கொடுத்துள்ளோம்.
முதல்வர் பழனிசாமி இன்று பேட்டி கொடுக்கும்போது, ரூ.2,500 பணம் கொடுப்பதை திமுக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். சத்தியமாக, அண்ணா மீது ஆணையாகச் சொல்கிறேன், பணம் கொடுப்பதை திமுக தடுக்க நினைக்கவில்லை. இது அரசாங்கத்தின் பணம் என்பதால் முறையாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும். பழனிசாமி பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டும்" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து ஸ்டாலின் பேசும்போது, "திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பெண்களுக்கு நிறைய சலுகைகள் அளிக்கப்பட்டன. திமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் குழுவினருக்கு சுழல் நிதி, வங்கிக் கடன், மானியம் முறையாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் மகளிர் குழுவை ஆதரவற்றதாக மாற்றிவிட்டனர். எனவே, திமுக ஆட்சிக்கு வந்ததும் தனியாகக் குழுவை அமைத்து ஆய்வு நடத்தி மீண்டும் சிறப்பாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் கூடிப்பேசி முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான் என்று அறிவித்துவிட்டனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர்கள் சிலர் கூறுகின்றனர். அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் குழப்பம் இருக்கிறது. முதல்வர் வேட்பாளர் தேர்வில் குழப்பம் இருக்கிறது" என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் மு.க.ஸ்டாலினுக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி வெள்ளிச் செங்கோல் வழங்கினார். பின்னர், 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பேனரில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.