Published : 29 Dec 2020 02:29 PM
Last Updated : 29 Dec 2020 02:29 PM

தஞ்சைப் பேரணியைத் தடுக்கும் முயற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவுவதாக, தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (டிச.29) வெளியிட்ட அறிக்கை:

"விவசாயிகளின் வாழ்வைச் சீர்குலைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில், எரிமலைச் சீற்றத்தோடு விவசாயிகள் 33 நாட்களாகப் போராடி வருகிறார்கள். இதுவரை 50 பேர் இறந்துவிட்டனர்; ஒரு வழக்கறிஞர் உட்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தை ஆதரித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில், இன்று மாலை தஞ்சையில் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அதைத் தடுக்கும் நோக்குடன், பேரணிக்குப் புறப்பட்டு வருகின்ற விவசாயிகளை, ஆங்காங்கு காவல்துறை வழிமறித்துத் தடுத்துக் கைது செய்கின்றது. விவசாய சங்கத் தலைவர்களின் வீடுகளுக்குச் சென்று, தாய்மார்களைக் காவல்துறை அச்சுறுத்துகின்றது.

நேற்று (டிச. 28), பெருமாநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளைக் கைது செய்து மண்டபங்களில் அடைத்துள்ளனர்.

சென்னை ஒய்எம்சிஏ திடலில், ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டித் திரட்டி வந்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு உரிய உரிமை, உழுது பயிரிட்டு உணவுப் பொருள்களை விளைவித்து மக்களை வாழ வைக்கின்ற விவசாயிகளுக்கும் உண்டு.

நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து தஞ்சைப் பேரணிக்குப் புறப்பட்டவர்களையும் கைது செய்து அடைத்துள்ளனர். இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களை ஏவுகின்ற தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, கைது செய்த விவசாயிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்; தஞ்சைப் பேரணியைத் தடுக்கும் முயற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.

வினையை விதைத்து வினையை அறுவடை செய்ய வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x