திமுகவுக்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுப்பார்: கராத்தே தியாகராஜன் பேட்டி

ரஜினியுடன் கராத்தே தியாகராஜன் | கோப்புப் படம்.
ரஜினியுடன் கராத்தே தியாகராஜன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பைக் கைவிட்டுள்ளது அவர் உடல்நலன் கருதி எடுத்த முடிவு. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கருதுகிறேன். ஆனாலும், ரஜினி வாய்ஸ் கொடுப்பார். நான் அறிந்தவரையில், திமுகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுப்பார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கராத்தே தியாகராஜன் ரஜினியின் தீவிர ஆதரவாளர். தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக ரஜினிக்காக அவர் ஆதரவுக் குரல் கொடுப்பது, டிவி விவாதங்களில் பங்கேற்பது எனச் செயல்பட்டு வருகிறார்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை எனப் பின்வாங்கியதை அடுத்து, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கராத்தே தியாகராஜன் கூறியதாவது:

“ரஜினி இன்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேன். உங்கள் உடல்நிலையை வைத்து முடிவு செய்யுங்கள் என்று 30-ம் தேதியே சொன்னேன். அவர் டிச.3-ம் தேதி அறிவித்தபோதே சொல்லியிருக்கலாம்.

அவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்ன அன்றே சொல்லியிருக்கலாம். இன்று சொல்லும் முடிவை அன்றே சொல்லியிருக்கலாம். அன்று கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுக்கும். மாவட்டச் செயலாளர்கள் அன்று கூட்டத்தில் ஒப்புக்கொண்டனர். ஆனால், ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்தான். கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் கன்வின்ஸ் பண்ண வேண்டும். அறிக்கை விட்டுள்ளார். மன்றம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். தேர்தலில் கட்டாயம் யாருக்காவது ஆதரவு தருவார் என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படவேண்டிய அணி, திமுக தலைமையில் உள்ள அணிதான். அதனால் கட்டாயம் அவர் திமுகவுக்கு எதிராகத்தான் முடிவெடுப்பார் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாக அவரது உடல்நிலை முக்கியம். கரோனா சூழ்நிலையை ஒட்டி அவர் முடிவெடுத்துள்ளார்.

96-ல் ரஜினி வாய்ஸால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அவரால்தான் என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். அன்று தனியாக திமுக வெல்லவில்லை. எனக்குத் தெரிந்து நான் பழகிய விதத்தில் திமுகவுக்கு எதிரான மனநிலையில் ரஜினி தற்போது உள்ளார். அதனால் திமுகவுக்கு எதிராக அவர் வாய்ஸ் கொடுப்பார். என்னுடைய தனிப்பட்ட கணிப்பு அது. நான் அவரை அறிந்தவரையில் சொல்கிறேன்.

திமுகவில் ஸ்டாலினை மட்டுமே எதிர்க்கவில்லை. மற்றவர்கள் அவரை விமர்சிக்கத்தான் செய்கிறார்கள்”.

இவ்வாறு கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in