Last Updated : 29 Dec, 2020 11:30 AM

 

Published : 29 Dec 2020 11:30 AM
Last Updated : 29 Dec 2020 11:30 AM

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்குமா? - கிரண்பேடி-நாராயணசாமி மீண்டும் மோதல்

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி - முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் கிரண்பேடி-நாராயணசாமி இடையே மீண்டும் மோதல் வலுத்துள்ளது. முதல்வர் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்காத சூழலில், சட்டங்கள், விதிகள், நீதித்துறை வழிமுறைகளை அமல்படுத்துவதில் உறுதியாக இருங்கள் என்று, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தலின் பேரில் ஆட்சியர் பூர்வாகார்க் தடை விதித்திருந்தார்

ஆனால், முதல்வர் நாராயணசாமி புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என உறுதியளித்திருந்தார். இது தொடர்பாக, பேரிடர் ஆணைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனிமனித இடைவெளியுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கும், முகக்கவசம் அணிவதை காவல் துறையினர் உறுதிப்படுத்தி கண்காணிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, வாய்மொழி உத்தரவுகள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளன. அரசு உத்தரவு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

அதேநேரத்தில், புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். விடுதிகளும் நிரம்ப தொடங்கியுள்ளது. நகர் முழுவதும் பனியால் குளுமை படந்துள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறையில் இருந்து அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், புதிய கரோனா எச்சரிக்கை அவசியம், வரும் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (டிச. 29) வெளியிட்ட தகவல்:

"மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. காவல் துறை, நகராட்சிகள், வர்த்தகர்கள், பொது மக்கள் பிரதிநிதிகள், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோர் இவ்வழிகாட்டுதல்களை நிலைநிறுத்த வேண்டும். இவ்வழிகாட்டுதல்களை சுருக்க நினைப்போர் தங்கள் சொந்த ஆபத்திலேயே செய்வார்கள். வழிகாட்டுதல்கள் அனைத்தும் பொதுவில் உள்ளதை அனைவரும் பார்க்கலாம். வழிகாட்டுதல்களை மாற்றி செய்தால் அவர்களே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். சாக்கு போக்கு இல்லாமல் எந்தவொரு விலகல்களையும் விளக்கி தெளிவுப்படுத்தும் பொறுப்பும் உள்ளது.

மக்களும் கரோனா விஷயங்களை கூர்ந்து கவனித்து, தங்களை பாதுகாப்புடன் வைத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியால் கைகளை தூய்மைப்படுத்துவது, ஒருவருக்கொருவர் போதிய பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம்.

இது வரவிருக்கும் புத்தாண்டுக்கும் பொங்கல் பண்டிகைக்கும் மிக அவசியம். மத்திய உள்துறை உத்தரவை தலைமை செயலாளர் ஏற்கெனவே அனைவருக்கும் விநியோகித்துள்ளார்.

அனைத்து வழிகாட்டுதல்களும், நீதிமன்ற அறிவுறுத்தல்களும் முரண்பாடாக இருந்தால், அனைத்து வாய்மொழி வழிமுறைகளும் விளக்கப்பட்டு தெளிவுப்படுத்தப்படுகின்றன.

ஆட்சியர்கள், முதுநிலை காவல் கண்காணிப்பாளர்களும் தான் சட்ட அமலாக்க உத்தரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பாளர்களாவார்கள். பாதுகாப்பாக இருங்கள், சட்டங்கள், விதிகள் மற்றும் நீதித்துறை வழிமுறைகளை அமல்படுத்துவதில் உறுதியாக இருங்கள்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆளுநர், முதல்வர் மோதல் எழுந்துள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டம் புதுச்சேரியில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x