

போராடி வரும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுவதாக, தமிழக காவல் துறைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (டிச. 29) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய அரசின் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 33-வது நாளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு சார்பில் இன்று தஞ்சாவூரில் பேரணி - பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு காட்டும் மிகச் சாதாரண ஜனநாயக உரிமையைக் கூட அனுமதிக்க மறுக்கும் 'விவசாயி மகன்' அரசு காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி விவசாயிகள் நலனை வஞ்சித்துள்ளது.
அரசின் அடக்குமுறைச் செயலுக்கு கோவிட் 19 நோய்த்தொற்றை ஆயுதமாகப் பயன்படுத்துவது மிக தரம் தாழ்ந்த செயலாகும். தஞ்சாவூர் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு செல்லும் பிற மாவட்ட விவசாயிகளை அவரவர் புறப்பட்ட இடங்களில் கைது செய்வது, விவசாயிகள் வாடகைக்கு அமர்த்தியுள்ள வாகன உரிமையாளர்களிடம் வாகனங்களை பறிமுதல் செய்வதாக மிரட்டி ரத்து செய்ய வைத்தது, விவசாயிகள் இயக்கத் தலைவர்கள் வீடுகளுக்கு சென்று பெண்களிடம் 'விசாரிப்பு' என்ற பெயரில் அச்சுறுத்துவது போன்ற சட்ட அத்துமீறலில் காவல்துறை ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இதன் மீது முதல்வர் நேரடியாக தலையிட்டு தஞ்சாவூர் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.