Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

ஆன்லைனில் கடன் கொடுக்கும் செல்போன் செயலிகளை முடக்க வேண்டும்: கூகுள் நிறுவனத்துக்கு சைபர் கிரைம் போலீஸார் கடிதம்

சென்னை

ஆன்லைனில் கடன் கொடுக்கும் செல்போன் செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கவேண்டும் என்று கூகுள் நிறுவனத்துக்கு தமிழக சைபர் கிரைம் போலீஸார் கடிதம் அனுப்ப உள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழக சிபிசிஐடியின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரி கூறியதாவது:

தினமும் ரூ.500 அபராத வட்டி

கடன் கொடுப்பதற்கென்றே iRupee, Cash bull, money more, Kissht உள்ளிட்ட ஏராளமான செல்போன் செயலிகள் உள்ளன. இவற்றில் நம் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் கொடுக்க வேண்டும். இதில் ஒருவர்ரூ.5 ஆயிரம் கடன் வாங்கினால்,சேவைக் கட்டணம், வட்டி எனஎடுத்து கொண்டு ரூ.3 ஆயிரத்து500 மட்டும் கொடுப்பார்கள். ஒருவாரத்தில் வட்டியோடு அசலை செலுத்தாவிட்டால் தினமும் 500 ரூபாய் அபராத வட்டி கட்ட வேண்டும். கடன் தொகையை செலுத்த தாமதம் ஏற்பட்டால் நமக்கு மிரட்டல் விடுக்கத் தொடங்குவார்கள்.

5 ஆயிரம் ரூபாய் கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு பெரும் கடனாளியாக்கி விடுவார்கள். இதுபோன்ற செயலி நிறுவனங்கள், மிரட்டுவதற்கென்றே பலரை பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்தசெயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போதே, நமது செல்போனில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படம், வீடியோ அடங்கிய கேலரிகளை இந்த செயலிகள் கண்காணிக்கத் தொடங்கி விடும்.

இதனால் நமது செல்போனில் உள்ள விவரங்களை செயலி நிறுவனங்கள் எளிதாக திருடி விடுகின்றன. நாம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க தாமதமானால், நமது தொடர்பு எண் பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் போன்செய்து, நாம் கடன் வாங்கியவிவரங்களை கூறி அவமானப்படுத்துகின்றனர்.

இளைஞர் தற்கொலை

இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விவேக்(27)என்ற இளைஞரை ரூ.4 ஆயிரம்கடனுக்காக, அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து கடன் கொடுக்கும் செயலிகள் மீதான நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்றனர். முதல்கட்டமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கடன் கொடுக்கும் செயலிகளை நீக்கக் கோரி கூகுள் நிறுவனத்துக்கு தமிழக சைபர் கிரைம் போலீஸார் கடிதம் அனுப்ப உள்ளனர்.

அதைத்தொடர்ந்து, ‘செபி’ அனுமதி இல்லாமல் இயங்கும் கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அதன் நிர்வாகிகளைக் கைது செய்ய முடிவு செய்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x