

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கடற்கரைக்கு வரவேண்டாம்
கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தடையை மீறி கூட்டம் கூடுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். ரிசார்ட்டுகள், உள் அரங்கங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
31-ம் தேதி இரவே தமிழகம்முழுவதும் கடற்கரைகளுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து அடைக்கப்படும். எனவே, பொதுமக்கள் யாரும்அன்று கடற்கரைகளுக்கு வந்து ஏமாற வேண்டாம். வாழ்த்து கூறுகிறேன் என்று பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
உள் அரங்கங்களில் புத்தாண்டுநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர்கள், கரோனா விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். 31-ம் தேதி இரவு அனைத்துசாலைகளிலும் சோதனை, ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், வேகமாக ஓட்டுபவர்கள் உட்பட போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயதுக்கு கீழுள்ளவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு பிறக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.