

அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல் தொடரும் நிலையில் முதல்வர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்துப் பேசியது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39-ல் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதேநேரம், மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை அதிமுக தக்கவைத்தது. "பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் வீசிய எதிர்ப்பு அலையே படுதோல்விக்கு காரணம்" என்று அதிமுக முக்கியத் தலைவர்களே வெளிப்படையாக பேசினர். தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் போலவே அதிமுக – பாஜக தலைவர்கள் பேசி வந்தனர்.
கடந்த நவ.21-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ‘‘பாஜக உடனான கூட்டணி தொடரும்’’ என்றனர். ஆனால், கூட்டணி பற்றி அமித்ஷா எதுவும் கூறவில்லை. பின்னர், கட்சி நிர்வாகிகளை சந்தித்த அமித்ஷா, ‘‘கூட்டணி பற்றி பேசுவதை விட்டுவிட்டு கட்சி வேலையை பாருங்கள். தமிழகத்தில் வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்துங்கள்’’ என்று அறிவுறுத்தினார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும், ‘‘கூட்டணி குறித்து மேலிடம்தான் அறிவிக்கும். முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் முடிவு செய்யும்" என்றே பேசி வந்தனர்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை சீண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வந்தது அதிமுகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே சென்னையில் கடந்த 27-ம் நடந்த அதிமுக பிரச்சார தொடக்க விழாவில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘‘கடந்த 50 ஆண்டுகாலமாக எந்த ஒரு தேசியக் கட்சியும் தமிழகத்தில் காலூன்ற முடியாத அளவுக்கு திராவிட இயக்க ஆட்சி நடைபெற்று வருகிறது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழைகிற சில அரசியல் கருங்காலிகள் இதை புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்த சூழலில்தான் முதல்வர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். 15 நிமிட சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ‘‘தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கல்வியாளர்கள், பொதுமக்களிடம் பாஜக பெற்ற 50 லட்சம் கையெழுத்து படிவங்களை முதல்வரிடம் ஒப்படைத்தோம். அதற்காகவே இந்த சந்திப்பு. அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். அதில் எந்த சிக்கலும் இல்லை’’ என்றார்.
ஆனால், அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்தே தமிழக பாஜக தலைவர்கள் சந்தேகத்துடன் பேசி வருவதால் முதல்வர் பழனிசாமி இறுக்கமான முகத்துடன் இருந்ததாகவும், அவரை சமாதானப்படுத்தும் விதத்தில் எல்.முருகன் பேசியதாகவும் கூறப்படுகிறது. அரசியல், கூட்டணி உறவு குறித்து இருவரும் பேசினாலும், பாஜக மேலிடத் தலைவர்களிடம் பேசிக்கொள்வதாக முதல்வர் கூறிவிட்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கின்றனர்.
முதல்வரை சந்தித்த பிறகு அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று எல்.முருகன் கூறியிருப்பதன் மூலம் கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதா என்று தமிழக பாஜக முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, "அதிமுக பிளவுபட்ட நிலையில் ஆட்சியை தொடர மத்திய பாஜக அரசின் தயவு அதிமுகவுக்கு தேவைப்பட்டது. மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அதிமுக எம்.பி.க்களின் தயவு பாஜகவுக்கு தேவைப்பட்டது. இந்த கட்டாயத்தால்தான் கூட்டணி தொடர்கிறது. உண்மையிலேயே கூட்டணியில் இரு கட்சிகளுக்குமே விருப்பம் இல்லை. அதிமுக – திமுக இடையே கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திமுகவைவிட திராவிடம், பெரியாரியம், மாநில உரிமைகள் பேசும் கட்சியாக அதிமுக மாறிவிட்டது. அதனால்தான் இந்தப் பிரச்சினை’’ என்றார்.
அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘அதிமுக, திமுக என்ற இரு திராவிடக் கட்சிகளில் ஒன்றை வீழ்த்தினால்தான் தமிழகத்தில் காலூன்ற முடியும் என்று பாஜக நினைக்கிறது. அதற்காகவே ரஜினியை தனிக் கட்சி தொடங்க தூண்டுகிறது. உடல்நலக் குறைவால் ரஜினி கட்சி தொடங்குவது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் கூட்டணியை முறிக்கவும் முடியாமல், தொடரவும் முடியாத நிலையில் பாஜக உள்ளது’’ என்றனர்.
ரஜினி கட்சி தொடங்குவாரா என்பதும், அதிமுக, திமுக கூட்டணிக்குள் யார் யார் இருப்பார்கள் என்பதும் பொங்கல் பண்டிகைக்குள் ஓரளவுக்கு தெரிந்துவிடும். அதுவரை குழப்பங்கள் தொடரும் என்கின்றனர் அதிமுகவினர்.