தந்தையே பெண் குழந்தையை விற்ற கொடுமை: ரூ.4 லட்சத்துக்கு அடுத்தடுத்து விற்ற 5 பேர் கைது

தந்தையே பெண் குழந்தையை விற்ற கொடுமை: ரூ.4 லட்சத்துக்கு அடுத்தடுத்து விற்ற 5 பேர் கைது
Updated on
1 min read

சேலத்தில் தந்தையே பெண் குழந்தையை விற்ற கொடுமை நடந்துள்ளது. மேலும், தந்தையிடம் இருந்து குழந்தையை வாங்கி பல லட்ச ரூபாய்க்கு அடுத்தடுத்து விற்பனை செய்த 5 பேரை போலீ

ஸார் கைது செய்தனர். தந்தை உள்ளிட்ட 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் நெத்திமேடு கே.பி.கரடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் விஜய். இவரதுமனைவி சத்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைள் உள்ளனர். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சத்யாவுக்கு கடந்த நவம்பர் 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை உறவினர்களிடம் காட்டி வருவதாக எடுத்துச் சென்ற விஜய் குழந்தையை திரும்ப கொண்டு வரவில்லை.

இதுதொடர்பாக விஜயிடம்சத்யா கேட்டபோது, குழந்தையை விற்பனை செய்ததாக விஜய் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சத்யா அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ முரளி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கே.பி.கரட்டைச் சேர்ந்த கோமதி (34) என்பவர் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த நிஷா (40), சித்ரா ஆகியோரிடம் ரூ.1.15 லட்சத்துக்கு குழந்தையை விஜய் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும்,குழந்தையை வாங்கிய நிஷாவும், சித்ராவும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த பாலாமணி என்பவருக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இதேபோல பாலாமணி, பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி (57) என்பவருக்கும், ராஜேஸ்வரி பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் கீதா என்பவருக்கு கூடுதல் விலைக்கு அடுத்தடுத்து குழந்தையை விற்பனை செய்துள்ளனர்.

இறுதியாக தருமபுரி மாவட்டம் பொம்மிடியைச் சேர்ந்த சுந்தர்ராஜன், சசிகலா தம்பதியிடம் ரூ.4 லட்சத்துக்கு குழந்தையை கீதா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டு, சத்யாவிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கோமதி, நிஷாவை ஏற்கெனவே கைது செய்த போலீஸார் நேற்று ராஜேஸ்வரி, கீதா, சுந்தர்ராஜன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், குழந்தையின் தந்தை விஜய் மற்றும் சித்ரா அவரது கணவர் கார்த்தி, பாலாமணி ஆகியோரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in