வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை; இளம் ஆசிரியை உயர் ரத்த அழுத்தத்துக்கு காரணமான கட்டி அகற்றம்: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சாதனை

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், உயர் ரத்த அழுத்தத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம் ஆசிரியையிடம் நலம் விசாரிக்கிறார் மருத்துவமனை இயக்குநர் விமலா. உடன் நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தளவாய் சுந்தரம்.
சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், உயர் ரத்த அழுத்தத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம் ஆசிரியையிடம் நலம் விசாரிக்கிறார் மருத்துவமனை இயக்குநர் விமலா. உடன் நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தளவாய் சுந்தரம்.
Updated on
2 min read

சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இளம்ஆசிரியையின் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைக்கு காரணமான கட்டியை கண்டறிந்து மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதன்மூலம், வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலையில் இருந்து ஆசிரியை விடுபட்டுள்ளார்.

சென்னை மணலியை சேர்ந்தஇளம்பெண் ஒருவர் (வயது 25), திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் உடல் சோர்வு, தலைவலி, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பள்ளி ஆசிரியையான இவர் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கும்போது ரத்த அழுத்தம் (பீபி) அதிகமாக இருந்துள்ளது. இளம் வயதில் அதிக பீபி இருந்ததால், மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை இயக்குநர் விமலா, நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார் ஆகியோரது உத்தரவின்படி, மருத்துவர்கள் பக்தவத்சலம், பார்த்தசாரதி மேற்பார்வையில் நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர் தளவாய் சுந்தரம் குழுவினர் ஆசிரியைக்கு தேவையான பரிசோதனைகளை செய்தனர். அதில், குணப்படுத்தக்கூடிய உயர் ரத்த அழுத்தம் இருப்பதும், சிறுநீரகம் அருகே உள்ள அட்ரினல் சுரப்பியில் (Adrenal Gland) கட்டி இருப்பதுதான் இதற்கு காரணம் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவர் தளவாய் சுந்தரம் குழுவினர் சிறுதுளை மூலம் நவீன லேப்ராஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்து, கட்டியுடன் அட்ரினல் சுரப்பியை அகற்றினர். இந்த சிகிச்சைக்கு பிறகு, பீபி பிரச்சினை நீங்கி ஆசிரியை நலமுடன் உள்ளார்.

இதுகுறித்து நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர் தளவாய் சுந்தரம் கூறியதாவது:

ரத்த அழுத்தப் பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கவனிக்காமல் விட்டால் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது.ரத்த அழுத்தத்தில் குணப்படுத்தக்கூடியது மற்றும் குணப்படுத்த முடியாத வகைகள் உள்ளன. ரத்த அழுத்தம் இருந்தால் முதலில் பரிசோதனை செய்து எந்த வகை என்பதை கண்டறிய வேண்டும்.குணப்படுத்த முடியாத ரத்த அழுத்தமாக இருந்தால் மாத்திரைசாப்பிடலாம். குணப்படுத்தக்கூடியதாக இருந்தால் உரிய சிகிச்சை பெற வேண்டும். அப்படி சிகிச்சை பெற்றால் 95 முதல் 100 சதவீதம் குணப்படுத்திவிடலாம். வாழ்நாள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டியது இல்லை.

இந்த ஆசிரியைக்கு குணப்படுத்தக்கூடிய, உப்பு அதிகமாக சுரக்கும் ரத்த அழுத்தம் இருந்தது. அட்ரினல் சுரப்பியில் கட்டி இருந்ததுதான் இதற்கு காரணம். லட்சத்தில் ஒருவருக்கு இதுபோன்ற பாதிப்பு இருக்கும். அதனால், கட்டியுடன் அட்ரினல் சுரப்பியையும் அகற்றிவிட்டோம். சிறுநீரகம்போல, அட்ரினல் சுரப்பியும் 2 உள்ளன. ஒன்றை அகற்றிவிட்டாலும் மற்றொரு அட்ரினல் சுரப்பி செயல்படும்.

சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு ரத்த அழுத்தப் பிரச்சினை சரியாகிவிட்டது. வாழ்நாள் முழுவதும் அவர் மாத்திரை சாப்பிட தேவையில்லை. உப்பு அதிகம் சுரந்ததால் குறைந்திருந்த பொட்டாசியம் அளவும் சமநிலைக்கு வந்துவிட்டது. எனவே, உடல் சோர்வும் நீங்கிவிட்டது. தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவாகும் இந்த அறுவை சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in