

புதுப்பட்டினம் ஊராட்சியில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் தலைமையிலும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலும் என 2 முறை ஒரே இடத்தில் நடத்தப்பட்டதால், கோஷ்டி பூசல்தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் மக்கள் கிராமசபை கூட்டம்நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சியில் கடந்த26-ம் தேதி திமுகவின் மக்கள்கிராமசபை கூட்டம் அக்கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு, மாவட்டச் செயலாளர் சுந்தர் உட்பட கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், அதே இடத்திலேயே திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பக்கீர் முகம்மது தலைமையில் 27-ம் தேதி மீண்டும் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஒரே ஊராட்சியில், அடுத்தடுத்த நாட்களில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றதால், கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, திமுகவின் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் கூறும்போது, “புதுப்பட்டினத்தில் 2 முறை திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டதன் முழுவிவரம் தெரியவில்லை. திமுகவின் கருத்துகளை மக்களிடம் ஆழமாக பதிவதற்காக 2-வதுமுறையாக கூட்டம் நடத்தப்பட்டிருக்கலாம்” என்றார்.