தேசிய நெடுஞ்சாலையில் முகமூடி கொள்ளையர்களா? - ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’: விழுப்புரம் எஸ்.பி

தேசிய நெடுஞ்சாலையில் முகமூடி கொள்ளையர்களா? - ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’: விழுப்புரம் எஸ்.பி
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி சுங்கச்சாவடி முதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை இடையே உள்ள சுமார் 50 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரங்களில் முகமூடி அணிந்த பைக் கொள்ளையர்கள் வலம் வருவதாக வலை தளங்களில் தகவல் வெளியானது. அந்தக் கும்பல் காரை இரும்பு தடியால் சேதப்படுத்தி, காரை நிறுத்த வைத்து வழிப்பறி செய்வதாகவும், அவர்கள் வரும் பைக்கில் பதிவெண் இல்லை என்றும், இதனால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறும் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்தி யிருந்தனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, “அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை.

நெடுஞ்சாலைகளில் முழு நேரமும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூடுதல் விழிப்புணர்வால் கடந்த மாதம் 42 ஆக இருந்த விபத்து இம்மாதம் 12 ஆக குறைந்துள்ளது. இந்த வாட்ஸ் ஆப் வீடியோவை தயாரித்து, வெளியிட்டவர் குறித்து விசாரித்து வருகிறோம். நல்லவற்றைப் பகிர வேண்டிய சமூக வலைதளங்களில் இப்படிப்பட்ட வதந்திகளும் பரவுகின்றன. பொதுமக்கள் வதந்திகளை இனம் கண்டு கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் கீழ் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதியில் கண்காணிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் சாலையோர உணவக உரிமையாளர்களிடம் சந்தேகப்படும்படியான நபர்கள் அப்பகுதியில் காண நேர்ந்தால் தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in