தற்கொலைக்கு முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்.
தற்கொலைக்கு முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்.

கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்: அதிகாரிகள் தொந்தரவே காரணம் எனப் புகார்

Published on

சிவகங்கையில் அதிகாரிகள் தொந்தரவால் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை செந்தமிழ்நகர் சிலம்புத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (58). அவரது மனைவி தமிழ்ச்செல்வி (54) தனியார் பள்ளி ஆசிரியராக உள்ளார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரமேஷ் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் தேசிய வேலையுறுதித் திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

ஓய்வு வயதை எட்டிய நிலையில், அரசின் ஓராண்டு கால பணி நீட்டிப்பு உத்தரவால் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு ரமேஷ் தனது வீட்டின் அருகே புதரில் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அவரது மனைவி தமிழ்ச்செல்வி போலீஸாரிடம் அளித்த புகாரில் கூறுகையில், ''உயரதிகாரிகள் நெருக்கடியால்தான் எனது கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in