Published : 28 Dec 2020 08:18 PM
Last Updated : 28 Dec 2020 08:18 PM

அரசுத் துறைகளில் காலியாக உள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான 1,848 பணியிடங்கள்; உத்தரவிருந்தும் நிரப்பாதது குறித்த வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 1,848 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து நெடுஞ்சாலைகள் துறை இயக்குனர் உத்தரவிட்டும் நிரப்பாததால், உடனடியாக நிரப்ப உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு 2016ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில், ஆதிதிராவிடர்களுக்கான 1,234 பணியிடங்கள், பழங்குடியினருக்கான 614 பணியிடங்கள் என மொத்தம் 1,848 பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

குறிப்பாக நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் 166 பணியிடங்கள் காலியாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பின்னடைவு காலிப் பணியிடங்களை நேரடி நியமனங்கள் மூலம் நிரப்ப தமிழகம் முழுவதும் உள்ள 8 கண்காணிப்பு பொறியாளர்களுக்கும், 20 மண்டலப் பொறியாளர்களுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைகள் துறை இயக்குனர் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.

இருந்தும், இதுவரை பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனக் கூறி, தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை எஸ்சி/எஸ்டி பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் எஸ்.ஆசைத்தம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், அலுவலக காவலர், எழுத்தர், ஓட்டுநர் உள்ளிட்ட பின்னடைவு காலிப் பணியிடங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிரப்பும்படி தமிழக அரசு, நெடுஞ்சாலைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு உத்தரவிடும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x