

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்துத் தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் 136-வது தொடக்க விழாவையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியின் சிலைக்கு திருநாவுக்கரசர் இன்று (டிச.28) மாலை அணிவித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
’’அதிமுக தலைமையிலான கூட்டணி என்று கூறிவிட்டு, முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் அறிவிப்போம் என்று பாஜக கூறுவது ஜனநாயக முரண். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற கருத்தை பாஜகவினர் கூற முடியுமா? பலவீனமான தலைமையாலும், அமைச்சர்களின் முறைகேடுகளாலும் அதிமுகவினரை பாஜக மிரட்டி வருகிறது.
இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கிறார்கள் என யாரைக் குறிப்பிட்டு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார் என்று தெரியவில்லை. அதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும்.
ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அவர் உடல் நலத்துடன் வந் பிறகு அரசியல் கட்சி தொடங்குவது, தொடங்காதது குறித்து அவரே அறிவிக்கட்டும்.
ஜனநாயக நாட்டில் பேரணி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என மக்களைச் சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்த அதிமுகவினரே அந்த உத்தரவை மீறிச் செயல்பட்டு வருகின்றனர். திமுகவின் கிராம சபைக் கூட்டத்துக்குத் தடை விதிக்கும் அதிமுகவினர், முடிந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு அவர்களும் கிராம சபைக் கூட்டம் நடத்தி மக்களைச் சந்திக்க வேண்டியதுதானே?
தமிழக ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.
இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.