Published : 28 Dec 2020 03:56 PM
Last Updated : 28 Dec 2020 03:56 PM

பொங்கல் பரிசு டோக்கன்; அதிமுக வழங்குவது போன்று அமைச்சர்கள் படம்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்  

சென்னை

பொங்கல் பரிசுப் பணம் ரூ.2500-க்கான டோக்கனை அதிமுக கட்சி வழங்குவது போன்று பொதுமக்களிடம் வழங்குவது தேர்தலை மனதில் கொண்டு நடக்கும் செயல். அரசுதான் பொங்கல் பரிசுத்தொகை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் திமுக புகார் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு இலவசப் பொங்கல் பரிசுகளுக்காக வழங்கப்படும் டோக்கன்களில் ஆளும் அதிமுக கட்சி டோக்கன்கள் வழங்குவது போன்று தோற்றத்தை ஏற்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்து தமிழக அரசு மூலம் டோக்கன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்தார்.

திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வழங்கிய புகார் மனு விவரம்:

* சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் -2021 க்கு முன்னதாக தமிழக மாநிலத்தில் ஆளும் அதிமுகவின் விளம்பரம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. தங்கள் தனிப்பட்ட லாபத்துக்காகவும், வாக்காளர்களைக் கவரவும் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தவறாகப் பயன்படுத்துகிறது.

* தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ‘இலவசப் பொங்கல் பரிசு’ திட்டத்தை அவசரமாக அறிவித்தார். 'பொங்கல் பரிசு' ஒவ்வொரு அட்டை வைத்திருப்பவர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரை போன்ற பிற பொருட்களுக்கு ரூ.2,500/- பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது. தமிழகத்தில் 2.6 கோடி ரேஷன்- அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் பொங்கல் பரிசைப் பெறுவார்கள்.

* பொங்கல் பரிசுப் பணம் அரசாங்க நிதியிலிருந்து வழங்கப்படுகிறது, ஆளும் கட்சியின் நிதியிலிருந்து அல்லது முதல்வர் அல்லது அமைச்சர்களின் பாக்கெட்டிலிருந்து அல்ல. ஆனால், பொது நிகழ்ச்சிக்கு டோக்கன்கள் வழங்கப்படும் விதம் மற்றும் முறை, ஆளும் அதிமுக கட்சி, தமிழக முதல்வர் மற்றும் அந்தந்தப் பகுதிகளின் அமைச்சர்களால் ‘பொங்கல் பரிசு’ வழங்கப்படுவது போல எடப்பாடி கே.பழனிசாமியின் பெயர் அதிமுகவின் முக்கோணத்தில் அச்சிடப்பட்டுள்ளது, அவரது புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயரும் டோக்கன்களில் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு முழுவதிலும், இந்த வகை டோக்கன்கள் ஆளும் அதிமுக கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்களால் பொங்கல் பரிசுப் பணம் தருவது போன்று ஒரு தோற்றத்தைப் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்படும்போது ஏற்படுத்தப்படுகிறது.

* திமுக இந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை, ஏனெனில் பொதுமக்கள் நலன் முக்கியம். மக்கள் நலனை விரும்பும் அரசாக, தொற்றுநோய் கால சூழ்நிலையிலும், புயல் பாதிப்பு நேரத்திலும் எங்கள் கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000/- வழங்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் பல மாதங்களாக அமைதியாக இருந்த முதல்வர், தனது தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.2,500/- ரொக்கப்பணம் என்று அறிவித்து, 20.12.2020 அன்று தனது தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் அறிவித்து தனது உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

* தமிழக மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதான தேர்தல் நடத்தை விதிமுறை இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றாலும், அதிமுக கட்சி பொங்கல் பரிசு வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதல்வரின் புகைப்படத்துடன், அமைச்சர்களின் புகைப்படத்துடன் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்படுவது சரியான நடைமுறை அல்ல. இது சம களத்தில் சமமான வாய்ப்பு எனும் தேர்தல் நடைமுறையைப் பாதிக்கும் செயலாகும்.

* எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் 'இலவசப் பொங்கல் பரிசு' விநியோகிக்க டோக்கன்கள் வழங்குவதைத் தவிர்க்குமாறு தமிழக அரசுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை உடனடியாக வழங்குமாறு திமுக கோருகிறது. மேலும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது ஆளும் அதிமுக கட்சியால் அல்ல, தமிழக அரசின் பொங்கல் பரிசு என்பதை உறுதிப்படுத்தவும்.

ஆளும் கட்சியால் புகைப்படங்களுடன் வழங்கப்படும் பொங்கல் பரிசு டோக்கன்கள் உங்கள் குறிப்புக்கு இணைக்கப்பட்டுள்ளன”.

இவ்வாறு அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x