

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட, நாடு முழுவதும் பக்தர்களிடம் காணிக்கை கோர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அகில உலக விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலர் மிலிந்த் பராந்தே தெரிவித்தார்.
இதுகுறித்துக் கோவையில் இன்று (டிச.28) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமி குறித்த வரலாற்றையும், தொல்லியல் உண்மைகளையும் ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கட்டுமானப் பணிகளைத் தொடங்க மத்திய அரசுக்கு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 5 கோபுரங்கள் மற்றும் 3 தளங்களுடன் இக்கோயில் கட்டப்பட உள்ளது. இரும்புகளைப் பயன்படுத்தாமல் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இளஞ்சிவப்பு கிரானைட் கற்கள் கொண்டு கோயில் கட்டப்படும்.
கோயில் கட்டுமானப் பணிக்கு நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் பங்களிப்பையும் பெறும் வகையில், மக்களைச் சந்தித்து காணிக்கை கோருவதற்கு, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, விஸ்வ ஹிந்து பரிஷத்தைக் கேட்டுள்ளது.
இதையடுத்து மகர சங்கராந்தி தினமான ஜன.15 முதல் மாசி பவுர்ணமி தினமான பிப்.27 வரை நாடு முழுவதும் உள்ள இந்து சமுதாய மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். நாடு முழுவதும் 4 லட்சம் கிராமங்களில் உள்ள 11 கோடி மக்களைச் சந்திக்க உள்ளோம். தமிழகத்தைப் பொறுத்தவரை 10 ஆயிரம் கிராமங்களில் 50 லட்சம் குடும்பங்களைச் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறவிகள், லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் ரூ.10, ரூ.100, ரூ.1000 மதிப்பிலான காணிக்கைக்கு ரசீதுகள் வழங்கப்படும்''.
இவ்வாறு மிலிந்த் பராந்தே தெரிவித்தார்.