Published : 28 Dec 2020 02:48 PM
Last Updated : 28 Dec 2020 02:48 PM

இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை வைரஸ்; கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை

சென்னை

இங்கிலாந்தில் பரவி வரும் புதுவிதமான கரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டிற்குப் பரவி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்டுள்ள 13 நபர்களுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனாவிற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தடுக்க ஒரேவழி முகக்கவசம் அணிவதுதான். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வருகிறார்கள். எனவே, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கப் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“அண்மையில் தமிழகத்தை நிவர் மற்றும் புரெவி என இரண்டு புயல்கள் தாக்கி, டெல்டா மாவட்டப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில், கனமழை பொழிந்த காரணத்தால் வேளாண் பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரண்டு புயல்கள் மற்றும் கனமழை ஏற்பட்டபோது அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வருவாய், உள்ளாட்சி, காவல், பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல துறைகள் ஒன்றாக இணைந்து துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொண்ட காரணத்தால் பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மிக கனமழை ஏற்பட்டதால் வயல்களில் நீர் நிரம்பி பயிர்கள் பாதிப்படைந்ததை நேரில் ஆய்வு செய்தபோது, விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, இழப்பீட்டை ஆய்வு செய்யும் பணி வேளாண் துறை மூலமாக தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயல்களிலுள்ள வெள்ளநீர் வடிந்தால்தான், சேதாரங்களைச் சரியான முறையில் கணக்கிட முடியும்.

விவசாயிகளின் வங்கிக் கணக்கு ஆகியவையும் பெறப்பட்டு, 4 தினங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு ஆய்வறிக்கை விரைவில் அரசுக்குத் தாக்கல் செய்யப்படுமென்று வேளாண் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே, கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் சொல்லி, பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அரசின் சார்பாக ஆலோசனைகளை வழங்கி செயல்பட்ட அமைச்சர்களுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள் அனைவருக்கும் இந்த நேரத்தில் அரசின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்நோய்த் தொற்றுப் பரவல் தமிழகத்தில் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கரோனா வைரஸ் தொற்று சீனாவில் கண்டறியப்பட்டவுடன், தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அன்றைய தினமே மேற்கொள்ளப்பட்டன. முன்னெச்சரிக்கையாக, மருந்துகள் கொள்முதல் செய்ய பணியாணையும், மருத்துவ உபகரணங்களான என்.95 முகக்கவசங்கள், மூன்று மடிப்பு முகக்கவசங்கள், முழு உடல் கவசங்கள் வாங்குவதற்கான பணிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டன.

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 ஒருங்கிணைப்புக் குழுக்கள், மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதுவிதமான கரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டிற்குப் பரவி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்டுள்ள 13 நபர்களுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனாவிற்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்க முடியும்.

இந்நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்கான ஒரே வழி முகக்கவசம் அணிவதுதான் என அரசால் வலியுறுத்திச் சொல்லப்பட்டு வருகிறது. இந்நோய்த் தொற்று குறைந்து வருவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வருகிறார்கள். எனவே, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டுமென்று அருள்கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். இந்த உருமாறிய கரோனா வைரஸ் தொற்றும் முகக்கவசம் அணியாத காரணத்தால்தான் ஏற்படுகிறதென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றையெல்லாம் பொதுமக்கள் கவனமாக எடுத்துக்கொண்டு, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 13 முறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன், 13 முறை மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களும், நடத்தியுள்ளோம். தலைமைச் செயலர் தலைமையில் 14 முறை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இவ்வாறு ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று, அனைத்து மாவட்டங்களிலும் அரசின் ஆலோசனைகளை ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தால் இந்நோய்த் தொற்றுப் பரவல் இந்தியாவின் மற்ற மாநிலங்களைக்காட்டிலும் தமிழகத்தில் குறைந்து, தற்போது ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள நிலையைக் காண முடிகிறது.

தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து, என்னுடைய தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மேலும், கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியதன் விளைவாக, ஒரு சில மாவட்டங்கள் தவிர்த்து, பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று மிக, மிகக் குறைந்திருக்கிறது.

மேலும், பல இடங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் நிலையைக் காண முடிகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சரியான முறையில் பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளித்து நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் உள்ள ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோவிட் நோய் தொற்றுக் கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை 7,544 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்படுவதுடன், இருவேளையும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று உள்ள பகுதிகளுக்கு வாகனம் சென்று, மக்களைப் பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளித்து, குணமடையச் செய்து இந்நோய்ப் பரவலைத் தடுத்துக் கொண்டிருக்கிறோம்.

வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின்படி, ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய் பாதிப்புள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய்த் தொற்றினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு கரோனா தொற்று வராமல் தடுக்க, களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இதுவரை 6 லட்சத்து 17 ஆயிரத்து 937 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 3 கோடியே 26 லட்சத்து 64 ஆயிரத்து 841 நபர்கள் கலந்துகொண்டதில், 12,59,753 நபர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், 67 அரசு மற்றும் 168 தனியார் ஆய்வகங்கள் என 235 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை ஆர்டி- பிசிஆர் (RT-PCR) பரிசோதனை செய்யப்பட்டவர்கள் சுமார் 1.35 கோடி நபர்கள். தற்போது நாளொன்றுக்கு சுமார் 70,000-க்கு குறையாமல் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை மூலம் தான் சரியான முடிவுகள் கிடைக்கும். இந்தியாவிலேயே ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை மேற்கொள்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

மொத்த பரிசோதனைகளில் 76 விழுக்காடு அரசு பரிசோதனை நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன. மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 1,38,309 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 34,849 படுக்கைகளும், ஐசியூ வசதி கொண்ட 7,706 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க கூடுதலாக 15,000 மருத்துவப் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உயிர்காக்கும் உயரிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. டொஸிலிசுமாப் 400 எம்ஜி, ரெம்டெஸ்விர் 100 எம்ஜி, இனாக்சபெரின் 40 எம்ஜி போன்ற உயரிய மருந்து வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், என்.95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மும்முடி முகக்கவசங்கள், சிடிஸ்கேன், எக்ஸ்-ரே இயந்திரங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவில் தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறோம். களப்பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒருங்கிணைந்த நோய் மேலாண்மைக்காக அலோபதி மருத்துவத்துடன் இந்திய முறை மருத்துவ சிகிச்சை, நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுரக் குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறோம்.

தமிழ்நாடு முழுவதும், அதிகமாக ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பகுதியிலேயே ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் படிப்படியாகத் தொடங்கப்பட்டு வருகின்றது. கடந்த 14ஆம் தேதி சென்னையில் நான் முதல் முதல்வரின் அம்மா மினி கிளினிக்குகளைத் தொடங்கி வைத்தேன்.

கிராமப்புறங்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும், நகரப் பகுதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் மினி கிளினிக்குகளில் சிகிச்சை அளிக்கப்படும்.

இத்திட்டம் மிக மிக இன்றியமையாத திட்டம், வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமென்று மக்கள் போற்றுகிறார்கள். இதற்குப் பொதுமக்களிடமிருந்து பெரும் வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கிலும் நாள்தோறும் சுமார் 75 முதல் 120 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள், கூடுதலாக களப் பணியாளர்கள் நியமித்து, காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்கள் வழங்கி, அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தனிமைப்படுத்தும் வசதி இல்லாது இருந்தால், அவர்களுக்கு அவ்வசதியை அரசு மையங்களில் ஏற்படுத்தி, 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் ஏற்பட்டவுடன் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியை வேறு இடத்திற்கு மாற்றி, இந்நோய்ப் பரவல் குறைந்தவுடன் படிப்படியாக, மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடத்திய ஆலோசனையில், தமிழ்நாட்டில் அதிக அளவில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதால் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்துள்ளதற்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, மற்ற மாநிலங்களையும் அதனைப் பின்பற்ற வேண்டுமென்ற செய்தியையும் தெரிவித்தார்.

அந்த அளவிற்கு நம்முடைய அரசு துரிதமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி, முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஆகியவற்றை பிரதமர் காணொலி ஆய்வுக் கூட்டம் மூலம் தெரிவித்தார். மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு அதற்கும் நாம் தயார் நிலையில் உள்ளோம்.

புத்தாண்டு, தைப்பொங்கல் பண்டிகைகள் வருவதால், தொடர் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் விழிப்புடன் கண்காணித்துச் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியத் தவறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுமென்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு அடிக்கடி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல் துறையும், உள்ளாட்சித் துறையும், மாவட்ட நிர்வாகமும் நகரப் பகுதிகளில் மாலை நேரங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று அன்போடு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

சுகாதாரத் துறை விழிப்புடன் இருந்து அனைத்து விடுதிகள், கல்லூரிகளில் நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் பரிசோதனைகள் மற்றும் இதர தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நோய்த் தொற்று 5.84 சதவிகிதமாக உள்ளது. சிகிச்சையில் இருப்போர் 8,947 நபர்கள், இறப்பு 1.48 விகிதமாக உள்ளது. குணமானவர்களின் 7,93,154 நபர்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை 8 கோடியே 41 லட்சம் நபர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு உணவுப் பொருட்கள் விலையின்றி வழங்கப்பட்டுள்ளன. அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க நிவாரணமாக ஏப்ரல் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

17 அமைப்பு சாரா தொழிலாளர்கள், 14 நல வாரியத் தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் என 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 2,000 ரூபாயும், 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாயும் அரசின் சார்பாக நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நோய்த் தொற்று இருந்த காலத்தில், அம்மா உணவகங்கள், சிறப்பு முகாம்கள், சமூக உணவுக் கூடங்கள் ஆகியவற்றில் நாளொன்றுக்கு சுமார் 7 லட்சம் மக்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டது. இதனால் மக்களுக்கு வயிறார உணவு கிடைத்தது. நிவர் மற்றும் புரெவி புயல் / கனமழையில், சென்னையில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று சுடச்சுட, சுவையான உணவு 8 நாட்களுக்கு மூன்று வேளையும் வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று, நிவர் மற்றும் புரெவி புயலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். டாக்டர் ரங்கராஜன் கமிட்டி அளித்த ஆலோசனைகள் அடிப்படையில் வருகிற தைப்பொங்கலை அனைத்து இல்லங்களிலும் சிறப்பாகக் கொண்டாட, சுமார் 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,500/- ரூபாய் ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுமென்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டு அந்தப் பணி ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது. இத்திட்டத்தை நான் ஏற்கெனவே தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துவிட்டேன்.

பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். இந்நோய்த் தொற்று ஏற்பட்ட காலகட்டத்திலும் 74 புதிய தொழில்கள் தமிழகத்தில் தொடங்குவதற்கு நாம் முனைப்போடு செயல்பட்டோம். அதன் மூலம் 61,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளோம். மாநில அளவில் மற்றும் மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் உதவித் திட்டம் விரைந்து கிடைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிறு-குறு (MS&ME) நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் கடன் உதவி திட்டம் (CORUS திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கிராமப்புறங்களில் தொழில் முனைவோரை ஊக்குவித்து, வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தைப் பெருக்க, சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசிற்கு துணை நிற்கின்ற பொதுமக்களுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x