

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசுப் பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வது, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது, நிலுவையிலுள்ள பிற கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகத் திமுக, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழகத்தில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக, தொடர்ச்சியாக போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் அரசுப் பணியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, கடந்த ஆண்டு 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டோம்.
இந்நிலையில் கடந்த 29.01.2019 அன்று முதல்வர் விடுத்த வேண்டுகோளை ஏற்றும் பொதுமக்கள், மாணவர் நலன் கருதியும் அரசுப் பணிகள் முடங்குவதால் அரசுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும் வேலைநிறுத்தத்தை கடந்த 30.01.2019 அன்றே கைவிட்டு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அரசுப் பணியாளர்களும் பணிக்குத் திரும்பினர்.
போராட்டம் நிறைவுக்கு வந்து ஏறத்தாழ 23 மாதங்கள் கடந்த நிலையிலும், 5068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்களின்மீது போராட்டக் காலத்தில் போடப்பட்ட குற்றக் குறிப்பாணைகள் 17(பி), 1500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டது ஆகியவை இன்றும் நிலுவையில் உள்ளன. குற்றக் குறிப்பாணைகள் 17(பி) நிலுவையில் உள்ளதால் பதவி உயர்வும், வருடாந்திர ஊதிய உயர்வும், பணி ஓய்வும், பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களும் கிடைக்காமல் ஊழியர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
போராட்டத்தின்போது காவல் துறையால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னணியில் எஃப்ஐஆர் பதியப்பட்டு அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இதோடு மட்டுமல்லாமல், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் புனையப்பட்ட குற்றக் குறிப்பாணைகள் 17(பி) நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி, 42-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படாத காரணத்தினால், ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
கரோனா நோய்த் தொற்று மிகக் கடுமையாக உள்ள இந்த நேரத்திலும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு 17(பி) குற்றக் குறிப்பாணை பெற்ற ஒரே காரணத்திற்காக, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்காமல் இருப்பது என்பது கரோனா பாதிப்பினை விட மிகக் கொடியதாகும்.
தமிழக அரசின் கரோனா நோய்த் தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுக் கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை விலக்கிக் கொண்டு 23 மாதங்கள் கடந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ சார்பாகப் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும், தமிழக அரசு ஆசிரியர்-அரசு ஊழியர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யாமல் இருப்பது என்பது ஆசிரியர்-அரசு ஊழியர்-அரசுப் பணியாளர்களிடையே கடுமையான அதிருப்தியினையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக கடந்த 11.06.2018 முதல் 13.06.2018 வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபொழுது, 12.06.2018 அன்று சட்டப்பேரவையில் நீங்கள் (ஸ்டாலின்) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்ததையும் அரசின் ஆசிரியர், அரசு ஊழியர்-அரசுப் பணியாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி கடந்த 14.09.2020 முதல் 16.09.2020 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பேசியதையும் நாங்கள் நெகிழ்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறோம்.
நியாயமான கோரிக்கைகளுக்காக ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டட, 5068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசுப் பணியாளர்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்வது, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் திமுக சார்பாக தமிழக அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பாகத் தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்''.
இவ்வாறு ஜாக்டோ ஜியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.