Published : 28 Dec 2020 11:53 AM
Last Updated : 28 Dec 2020 11:53 AM

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை

தமிழகத்தில் 38-வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தை நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு இன்று முதல்வர் பழனிசாமி முறைப்படி தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று (டிச.28) தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.

கடந்த மார்ச்.24 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநிலத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கிட ஏப்.7 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கத்திற்கான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, புதிய மாவட்டம் தோற்றுவிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதற்கான அரசாணை (நிலை) எண் 796, நாள் 28.12.2020 இன்று வெளியிடப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழக முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இப்புதிய மாவட்டமானது, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள், 15 வருவாய் குறு வட்டங்கள் மற்றும் 287 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் சமீபத்தில் கூடுதலாக நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து நெல்லை, தென்காசி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு என்றும், விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி என்றும் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

நாகப்பட்டினத்தை இரண்டாகப் பிரித்து நாகை, மயிலாடுதுறை மாவட்டம் என்கிற அறிவிப்பு இருந்த நிலையில், இன்று முறைப்படி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உதயமானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x