

ஆந்திரம், காஷ்மீரைப் போல் உயர்கல்வியில் அகில இந்திய இட ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் வேண்டாம் என்று தமிழகமும் சொல்ல வேண்டும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சிறப்பு உயர் மருத்துவப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 28-ம் தேதி அளித்த தீர்ப்பில், வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் படிப்புக்காக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 50 சதவீதம் இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக அளிக்க வேண்டும்.
இதேபோல், மருத்துவ முதுகலைக் கல்விக்கு 15 சதவீதம் இடங்களை அளிக்க வேண்டும். மாநில அரசு தனது நிதியை கொட்டி செலவழித்து மருத்துவக் கல்லூரிகளை நிர்வகித்தால், அங்கு சொந்த மாநிலத்தவர் படிக்க முடியாத நிலையை உருவாக்குவது நேர்மையானது அல்ல.
எங்களுக்கு அகில இந்திய இட ஒதுக்கீட்டிலிருந்து இடங்கள் வேண்டாம் என்று ஆந்திரா, காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் கூறியுள்ளன. இதனால், அந்த இரு மாநிலங்களிலும் உள்ள இடங்கள் மத்திய தொகுப்புக்கு போவதில்லை. எனவே, தமிழ்நாடு அரசும் இவ்வகையில் சிந்திக்கலாம். மேலும், உச்ச நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டிய பதில் மனுவில், தமிழகத்துக்கே உரிய சமூக நீதி உணர்வை விரிவாக எடுத்துரைக்க வேண்டும்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.