

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் கரோனாவிதிமுறைகளை பின்பற்றி வெளிமாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன மகோத்சவ விழா இன்று (டிச.28) தொடங்கி 31-ம் தேதி வரை நடக்க உள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இவ்விழாவுக்கு கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார்.
இதை எதிர்த்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனதுமனுவில், ‘சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா என்பது பிரசித்தி பெற்ற ஒன்று. ஆண்டுதோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்பது வழக்கம். ஒட்டுமொத்தமாக வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை விதிப்பதற்கு பதிலாக போலீஸாரின் ஒத்துழைப்புடன் தனிமனித விலகல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வழக்கம்போல விழாவை நடத்த உத்தரவிட வேண்டும். அத்துடன் வெளி மாவட்ட பக்தர்களுக்கும் அனுமதி வழங்க அறிவுறுத்த வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விடுமுறை தினமான நேற்று அவசர வழக்காகநீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுதரப்பில், ‘‘கரோனா பரவலை கருத்தில்கொண்டே பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வெளி மாவட்ட பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எதுவும் அரசுக்கு இல்லை’’ என தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்துக்குள்ளே பொது போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் மத விவகாரங்களில் கட்டுப்பாடுகள் எதுவும் காரணமின்றி விதிக்க முடியாது. எனவே, சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் வெளிமாவட்ட பக்தர்களையும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்க வேண்டும். விழா நாட்களில் மாலை 3 முதல் 4 மணி வரையிலும், 4.30 முதல் 5.30 மணி வரையிலும், 6 முதல் 7 மணி வரையிலும் தலா 200 பக்தர்கள் வீதம்முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து அனுமதிக்க வேண்டும்.
பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்து, வெப்பநிலை அதிகமாக இருந்தால் மட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கரோனாபரிசோதனை நடத்த வேண்டும். கரோனா அறிகுறி இல்லாத பட்சத்தில் அனுமதி வழங்க வேண்டும். அனைத்து பக்தர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை.
இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.