

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்னெச்சரிக்கையாக 120 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 ஐசியு படுக்கை உட்பட 120 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், அனைத்து அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 1,438 பேரை பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கரோனா தொற்று இருந்தது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ததில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் சளி மாதிரிகள் புனேஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள் ளது. ஓரிரு நாளில் புதிய வைரஸ் தொற்று பாதிப்பா என்பது தெரிந்துவிடும்.
புதிய வைரஸ் வீரியம், தன்மை குறித்த முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவையில்லை. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் புதிய வைரஸ் தொற்றால் இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாததே முக்கிய காரணம். தமிழகத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மீண்டும் ஊரடங்கு போடும் நிலைஏற்படாது. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி ஆராய்ச்சி முடிந்து விரைவில் தடுப்பூசி வந்துவிடும். முதல்வர் அறிவித்தபடி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். புத்தாண்டை வீடுகளில் மக்கள் கொண்டாட எந்த தடையும் இல்லை. பொது இடங்களில் அதிகமாக கூட்டம் கூடாமல் இருக்க கட்டுப்பாடுகள் உள்ளன. அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிதாக 1,009 பேருக்கு தொற்று
கரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று 1,009 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 14,170 ஆனது. இதுவரை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 93,154 பேர் குணமடைந்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 7 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என நேற்று 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,069 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1 கோடியே 39 லட்சத்து 24,527 பரிசோதனைகள் நடந்துள்ளன. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் இதுவரை 13 பேருக்கு தொற்று உறுதியானது. புதிய வகை வைரஸ் தொற்றா என்பதை கண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.