வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் புதிய தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி வெற்றிகர சோதனை: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்

வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் புதிய தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி வெற்றிகர சோதனை: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்
Updated on
1 min read

சென்னை வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் புதிய தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. ஜனவரி இறுதியில் இந்த தடத்தில் ரயில் சேவை தொடங்கும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த கட்டமாக வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணிகள் ரூ.3,700 கோடியில் நடைபெற்றன. கரோனா ஊரடங்கு காரணமாக இப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அளித்த பிறகு, இத்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்றன.

மொத்தம் 9 கி.மீ. தூரமுள்ள இந்த வழித்தடத்தில் சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 8 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள், தண்டவாளம், சிக்னல்களை அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த தடத்தில் இரு மார்க்கத்திலும் டீசல் ரயில்இன்ஜின் இயக்கி கடந்த 26-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில், இந்த தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி நேற்று வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ், இயக்குநர்கள் ராஜீவ் நாராயண் திவேதி, ராஜேஷ் சதுர்வேதி உள்ளிட்ட அதிகாரிகள் அதில் பயணம் செய்து, மின்சார கம்பிகள், தண்டவாளங்களின் தரம், ரயில் நிலைய நடைமேடைகளின் நுழைவுப் பகுதிகள், சுரங்கப் பாதையில் தண்டவாளங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் அடுத்த கட்டமாக வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ரயில் இன்ஜின், மெட்ரோ ரயில்இயக்கப்பட்டு வெற்றிகரமாக ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் எஞ்சியுள்ள பணிகள், தொழில்நுட்ப பணிகளை நிறைவு செய்ய உள்ளோம். அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்திய பிறகு, மெட்ரோ ரயில் இயக்கியும், ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்தியும் ஒப்புதல் அளிப்பார்.

போக்குவரத்து நெரிசல் குறையும்

தொடர்ந்து, இந்த தடத்தில் ஜனவரி இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது பயன்பாட்டுக்கு வரும்போது வடசென்னை மக்கள் விமானநிலையம், சென்ட்ரல், எழும்பூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக செல்ல முடியும். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in