

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை தேவை என்றும், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் துறை மீது உயர் நீதிமன்றத்துக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இந்த உத்தரவு காட்டுகிறது.
தமிழகத்தில் காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீதித் துறைக்கே காவல் துறை மீது நம்பிக்கை இல்லை என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு என்ன ஆவது? எனவே, உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளார்.