9 மாதங்களுக்குப் பிறகு திறப்பு: கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
9 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் கோவை குற்றாலத்தில் இன்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கோவை குற்றாலத்துக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றாலத்துக்குச் செல்லும் வழிகள் சுத்தப்படுத்தப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் இன்று சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அனுமதித்தனர்.
நுழைவுக் கட்டணம் செலுத்தும் முன்பு வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்டனர். சாடிவயலில் இருந்து கோவை குற்றாலம் செல்லும் வாகனத்தில் ஏறும் முன்பு, அங்கேயும் ஒவ்வொரு பயணிக்கும் வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
பின்பு சானிடைசரைக் கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொண்டு குறைவான நபர்கள் வாகனத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர். உணவு உள்ளிட்ட வேறு எந்தப் பொருட்களையும் சுற்றுலாப் பயணிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “முதல் நாளில் கோவை மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். குளிக்கும் இடத்திலும் ஒலிப்பெருக்கி மூலம் அவ்வப்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன" என்றனர்.
